ADDED : நவ 13, 2026 07:31 PM
மீஞ்சூர்: வடசென்னை அனல் மின் நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலார்கள், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, இன்று (நவ.,13) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில், வடசென்னை அனல் மின் நிலையம் ஒன்று, இரண்டு மற்றும் வடசென்னை – 3 ஆகியவற்றில் உள்ள ஆறு அலகுகள் மூலம், தினமும் 2,630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த அனல் மின் நிலையங்களில், 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர்.
நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் இவர்கள், பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த தொழிலாளர்கள் அனல் மின் நிலைய நுழைவாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பேசியதாவது:
த.வெ.க., அரசின் தேர்தல் வாக்குறுதியில், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்திருந்தது.
அதில், அனல் மின் நிலையங்களில் பணிபுரிவோருக்கு முன்னுரிமை அளித்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க மின் வாரியம் முன்வர வேண்டும்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அடுத்த கட்டமாக வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
