/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் குப்பை கிடங்கு இல்லாமல் 23 ஆண்டாக... போராட்டம்:இடம் தேர்வு செய்வதில் வருவாய் துறையினர் அலட்சியம்
/
திருத்தணியில் குப்பை கிடங்கு இல்லாமல் 23 ஆண்டாக... போராட்டம்:இடம் தேர்வு செய்வதில் வருவாய் துறையினர் அலட்சியம்
திருத்தணியில் குப்பை கிடங்கு இல்லாமல் 23 ஆண்டாக... போராட்டம்:இடம் தேர்வு செய்வதில் வருவாய் துறையினர் அலட்சியம்
திருத்தணியில் குப்பை கிடங்கு இல்லாமல் 23 ஆண்டாக... போராட்டம்:இடம் தேர்வு செய்வதில் வருவாய் துறையினர் அலட்சியம்
UPDATED : செப் 08, 2025 02:05 AM
ADDED : செப் 07, 2025 10:16 PM

திருத்தணி:குப்பைகள் சேகரித்து கொட்டுவதற்கு கிடங்கு வசதி கேட்டு, 23 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம் போராடி வருகிறது. ஆனால், வருவாய் துறையினர் இடவசதி ஏற்படுத்தி தருவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், துப்புரவு பணியாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
![]() |
மேலும், காய்கறி, பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில், திருத்தணி நகராட்சியில், தினமும் 19.60 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில், 10.80 டன் மட்கும் குப்பை, 8.80 டன் மட்கா குப்பை.
கண்காணிப்பு இதுதவிர, செருப்பு, துணி, பிளாஸ்டிக் கழிவுகள் என, தினமும் 3 டன் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை, 20 நிரந்தர துப்புரவு பணியாளர்கள், 101 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரித்து, பெரியார் நகர் பகுதியில் உள்ள பசுமை உரக்குடிலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதை, ஐந்து மேற்பார்வையாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த உரக்குடிலில், 20 ஊழியர்கள் மூலம் குப்பைகளை தரம்பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும், மட்காத குப்பைகள் தனியார் நிறுவனங் களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2002 - 2017ம் ஆண்டு வரை குப்பைகள் கொட்டுவதற்கு கிடங்கு வசதியில்லாததால், நகராட்சி ஊழியர்கள் நந்தியாறு, அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் கன்னிகாபுரம் ஆகிய வனப்பகுதியில் கொட்டி வந்தனர்.
![]() |
இதனால், அவ்வப்போது குப்பை லாரி, டிராக்டர்களை பொதுமக்கள் சிறைபிடித்து வந்தனர்.
தொடர்ந்து, திருத்தணி நகராட்சி இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று, குப்பைகளை தரம் பிரித்து வாங்கினர்.
நடவடிக்கை இந்த குப்பைகளை, 2017 - 18ம் ஆண்டு துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 45 லட்சம் ரூபாயில் பெரியார் நகரில் ஏற்படுத்திய பசுமை உரக்குடிலில் கொட்டி வருகின்றனர்.
இந்த உரக்குடில், 1 ஏக்கருக்கும் குறைவாக உள்ளதால், குப்பைகளை சேமித்து வைக்க முடிவதில்லை. இதன் காரணமாக சில துப்புரவு ஊழியர்கள், திருத்தணி அருகே சாலையோரம் குப்பைகளை கொட்டி, தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம், பலமுறை வருவாய் துறை அதிகாரிகளிடம் குப்பைகள் கொட்டுவதற்கு போதிய இடவசதி ஏற்படுத்தி தரும்படி கடிதம் எழுதியும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், 23 ஆண்டுகளாக குப்பை கிடங்கு இல்லாமல் திருத்தணி நிர்வாகம் தவித்து வருகிறது.
எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குப்பை கிடங்கிற்கு இட வசதி செய்து தர வேண்டும் என, நகராட்சி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கல் இதுகுறித்து, திருத்தணி நகராட்சி அதிகாரி கூறியதாவது:
திருத்தணியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, பெரியார் நகரில் உள்ள பசுமை உரக்குடிலுக்கு கொண்டு வருகிறோம். அங்கேயும் போதிய இடவசதியில்லாததால், குப்பைகளை தரம் பிரித்து, உரம் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், மட்காத குப்பைகள் கொட்ட போதிய இடமில்லாததால், திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், குப்பை கொட்டுவதற்கு திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு மற்றும் கார்த்திகேயபுரம் ஆகிய பகுதிகளில், வருவாய் துறையினர் கடமைக்காக இடம் காண்பித்தனர்.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாலும், அந்த இடம் கைவிடப்பட்டது. எனவே, எங்களுக்கு பிரச்னை இல்லாத இடத்தை வருவாய் துறையினர் தேர்வு செய்துதர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.