/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத திருவாலங்காடு கோசாலை
/
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத திருவாலங்காடு கோசாலை
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத திருவாலங்காடு கோசாலை
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத திருவாலங்காடு கோசாலை
ADDED : ஜன 19, 2025 02:33 AM

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் கோசாலை அமைக்கப்பட்டு 40க்கும் மேற்பட்ட பசுக்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, பக்தர்கள் காணிக்கையாக பசுக்களை கொடுத்தாலும் வைத்து பராமரிக்கும் அளவுக்கு இடவசதி இல்லாததால், பல்வேறு காரணங்களை கூறி கோவில் நிர்வாகம் பசுக்களை வாங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
மழைக்காலத்தில் கோசாலை அமைக்கப்பட்டு உள்ள இடம் நீர் தேங்கி சகதியாக காட்சியளிப்பதுடன் மாட்டுச்சாணத்துடன் சேர்ந்து கோவில் வளாகம் முழுதும் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
எனவே, மாற்று இடத்தில் கோசாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தெற்கு மாடு வீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் கோசாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, கடந்தாண்டு, 20 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கோசாலை அமைக்கும் பணி துவங்கியது. கட்டடப் பணி முடிந்து எட்டு மாதமாகியும் பயன்பாட்டுக்கு வராததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே, விரைந்து கோசாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர, திருத்தணி கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின்சாரம் இணைப்பு வேண்டி மின்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் இணைப்பு கிடைத்ததும் கோசாலை பயன்பாட்டுக்கு வரும்' என்றார்.

