/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி;கழிவுநீர் கால்வாயான ரயில்வே சுரங்கப்பாதை
/
திருவள்ளூர்: புகார் பெட்டி;கழிவுநீர் கால்வாயான ரயில்வே சுரங்கப்பாதை
திருவள்ளூர்: புகார் பெட்டி;கழிவுநீர் கால்வாயான ரயில்வே சுரங்கப்பாதை
திருவள்ளூர்: புகார் பெட்டி;கழிவுநீர் கால்வாயான ரயில்வே சுரங்கப்பாதை
ADDED : ஆக 29, 2024 02:16 AM

கழிவுநீர் கால்வாயான ரயில்வே சுரங்கப்பாதை
திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த வழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர்.
மேட்டுத் தெரு ரயில்வே கேட் மூடும் போது பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் சுரங்கப்பாதை வழியாக, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், சில நாட்களாக சுரங்கப்பாதை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், சுரங்கப்பாதையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம், கழிவுநீர் செல்வதை தடுத்து நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -டி.வேலன், திருத்தணி.
நீர்வரத்து கால்வாய் சீரமைக்க எதிர்பார்ப்பு
திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் கால்வாய் வழியாக தாடூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும். ஆனால், நீர்வளத் துறையினர் பராமரிக்காததால் கால்வாய் புதைந்துள்ளன.
இதனால், தாடூர் ஏரி சில ஆண்டுகளாக பருவ மழை பெய்தும் தண்ணீர் வரத்து இல்லாமல் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.
கடந்தாண்டு ஊராட்சி நிர்வாகம் தாமாக முன்வந்து, நீர்வரத்து கால்வாய்யை துார்வாரும் பணி மேற்கொண்டது. நிதி பற்றாக்குறையால் கால்வாய் பணிகள் முழுமையாக முடிக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டது.
எனவே, நீர்வரத்து கால்வாயை சீரமைத்து, தாடூர் ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- --எஸ்.பாலாஜி, தலையாறிதாங்கல்.
புதர் சூழ்ந்த டிரான்ஸ்பார்மர் மின்வாரியம் விழிக்குமா?
திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், பட்டரைபெரும்புதூர் அடுத்து அமைந்துள்ளது வரதாபுரம்.
இங்குள்ள டிரான்ஸ்பார்மர் வாயிலாக வரதாபுரம் கிராமம், அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மற்றும் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிரான்ஸ்பார்மரை சூழ்ந்து முட்செடிகள் முளைத்து புதராக காட்சியளிக்கிறது.
இதனால், இரவு நேரங்களில் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டால், சீர்செய்வதில் தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதை சீரமைக்க மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கு.சிவகுருநாதன்,
வரதாபுரம்.

