/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் தொகுதி யாருக்கு? அ.தி.மு.க.,வில் போட்டா போட்டி
/
திருவள்ளூர் தொகுதி யாருக்கு? அ.தி.மு.க.,வில் போட்டா போட்டி
திருவள்ளூர் தொகுதி யாருக்கு? அ.தி.மு.க.,வில் போட்டா போட்டி
திருவள்ளூர் தொகுதி யாருக்கு? அ.தி.மு.க.,வில் போட்டா போட்டி
ADDED : மார் 19, 2024 08:48 PM

திருவள்ளூர்:தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் முதலாவது தொகுதியாக விளங்குவது, திருவள்ளூர் - தனி தொகுதி. 2008ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு பின், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதியாக விளங்கி வருகிறது.
கடந்த 1951 முதல் 1962 வரை இத்தொகுதியானது பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதி.
இந்த தொகுதியில் திருவள்ளூர், பூந்தமல்லி(தனி), ஆவடி, மாதவரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி) என, ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது.
இங்கு 1951 முதல் 2019 வரை நடந்த லோக்சபா தேர்தலில் 1951, 1957, 1962, 2019 ஆகிய நான்கு முறை காங்கிரஸ் கட்சியும், 2009, 2014 என, தொடர்ந்து இரண்டு முறை அ.தி.மு.க., வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.
இதில், அ.தி.மு.க., சார்பில் வேணுகோபால் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றார். அதனால், இந்த முறையும் இவருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது திருவள்ளூர் - தனி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக கடம்பத்துார் ஒன்றிய கழக அவைத் தலைவரும், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலருமான சிற்றம்பாக்கம் ஜெ.சீனிவாசன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
இவர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணாவின் நெருக்கமான ஆதரவாளராக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சியினரும், திருவள்ளூர் தொகுதியை கேட்டு மேலிடத்தில் பேசி வருவதாகவும் தகவல் கசிந்து வருகிறது.
எனவே, திருவள்ளூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக இரண்டு முறை வெற்றி பெற்றவருக்கா அல்லது ஒன்றிய கழக அவைத் தலைவருக்கா அல்லது கூட்டணி கட்சிக்கா என்பது, அ.தி.மு.க., மற்றும் அரசியல் வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

