/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடிப்படை வசதிகள் இல்லாத திருவேங்கிடபுரம் சுடுகாடு
/
அடிப்படை வசதிகள் இல்லாத திருவேங்கிடபுரம் சுடுகாடு
ADDED : டிச 17, 2024 12:38 AM
பொன்னேரி, பொன்னேரி அடுத்த, திருவேங்கிடபுரம் பகுதியில், பல்வேறு பகுதிகளுக்கான சுடுகாடு அமைந்து உள்ளது. இங்கு, குடிநீர் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், இறுதி சடங்கிற்கு வருபவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தண்ணீர் தேவைக்காக அப்பகுதியில், கைபம்பு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இது பழுதாகி, ஆறு மாதங்கள் ஆன நிலையில், சீரமைக்கப்படாமல் இருக்கிறது.
இதற்காக பொருத்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைப்கள் வெளியே எடுக்கப்பட்டு, அதே பகுதியில் வீணாகி வருகிறது. இறுதி சடங்கிற்கு வருபவர்கள், வீட்டில் இருந்து சடலத்துடன் குடங்களில் தண்ணீர் கொண்டு செல்லும் நிலையே உள்ளது.
மின்விளக்கு வசதியும் இல்லாமல் இரவு நேரங்களில் இருண்டு கிடக்கிறது. இதனால் மாலை, இரவு நேரங்களில், இறுதி சடங்கிற்கு வருபவர்கள் அவதிப்படுகின்றனர்.
பகல் நேரங்களில் சமூக விரோதிகள் அங்கு, கஞ்சா புகைப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களால் சுடுகாட்டில் பொருத்தப்படும் மின்விளக்குகளும் உடைத்து சேதப்படுத்தப்படுகின்றன.
தண்ணீர், மின்விளக்கு வசதி இல்லாமல், இறுதி சடங்கிற்கு வருபவர்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகின்றனர்.
மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சுடுகாட்டில் தண்ணீர் மற்றும் மின்விளக்கு வசதியை ஏற்படுத்திட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பகல் நேரங்களில் போலீசார் சுடுகாடு பகுதியில் முகாமிட்டு, சமூக விரோதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

