/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அமைச்சர் ரோஜா உதவியாளரை தாக்கிய மூன்று பேர் கைது
/
அமைச்சர் ரோஜா உதவியாளரை தாக்கிய மூன்று பேர் கைது
ADDED : பிப் 05, 2024 04:22 AM

திருத்தணி : தேர்தல் முன்விரோதத்தில் ஆந்திர மாநில அமைச்சர் ரோஜாவின் உதவியாளரை கொலை செய்யும் நோக்கத்தில் இரும்புராடால் தாக்கிய, தெலுங்கு தேச கட்சியினர் மூவரை திருத்தணி போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பி.எம்.எஸ். நகரை சேர்ந்தவர் பிரதீஷ், 35. இவர் ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ரோஜாவின் உதவியாளராக உள்ளார். நகரியில் இருசக்கர வாகன ேஷா ரூம் வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த, 2ம் தேதி காலை பிரதீஷ் தன் வீட்டின் அருகே நடைபயிற்சிக்கு சென்ற போது, மர்ம நபர்கள் மூன்று பேர் வழிமறித்து இரும்பு ராடால் பிரதீஷ் தலை மற்றும் கால்கள் மீது தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதில் பிரதீஷ் இரு கால்களும் எலும்பு முறிவு ஏற்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகார்படி திருத்தணி போலீசார், மர்ம நபர்களை தேடி வந்தனர். திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவுபடி, தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்.ஐ., ராக்கிகுமாரி ஆகியோர் திருத்தணி--- நாகலாபுரம் நெடுஞ்சாலை, தாழவேடு பகுதியில் வாகன சோதனயில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பல்சர் பைக்கில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் நகரி மேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நவீன், 31 என்றும், அமைச்சர் ரோஜாவின் உதவியாளர் பிரதீைஷ தன் நண்பர்களுடன் சேர்ந்து, இரும்பு ராடால் தாக்கி கொலை முயற்சி செய்ததும் தெரிந்தது.
நவீன் போலீசாரிடம் தெரிவித்தாவது:
தெலுங்கு தேசம் கட்சியின் நகரி ஒன்றிய இளைஞரணி துணை தலைவராக உள்ளேன். கடந்த சட்டசபை தேர்தலில், நகரி தொகுதியில் கட்சி சார்பில் பானுபிரகாஷ் என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர்., கட்சியில் நடிகை ரோஜா போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் ஆனார்.
ரோஜாவின் உதவியாளர் பிரதீஷ், எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதும், என்னையும், எங்கள் கட்சியினரையும் மிரட்டி வந்தார்.
இதையடுத்து எங்கள் கட்சியை சேர்ந்த நகரி மண்டல இளைஞரணி தலைவர் சிட்டிபாபு என்பவர் என்னிடம், 'பிரதீைஷ கொலை செய்து விட்டால் வரும் சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் எளிதாக வெற்றி பெறுவேன்' என கூறினார்.
இதையடுத்து நானும், எனது கட்சி நிர்வாகிகள் சிரஞ்சீவி, 24, பரசுராம், 39 ஆகிய மூவரும் பிரதீைஷ கொலை செய்ய திட்டமிட்டு திருத்தணியில் தங்கியிருந்து பிரதீஷ் செயல்பாடுகள் குறித்து நோட்டமிட்டோம்.
அவர் தினமும் காலையில் தனியாக நடைபயிற்சி செல்வதை அறிந்து கடந்த 2ம் தேதி காலை மூன்று பேரும் இரும்பு ராடுகளுடன் சென்று, அவரது தலை மற்றும் இரு கால்கள் மீது தாக்கினோம். அப்போது, அவ்வழியாக வந்த பெண்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பி சென்றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, திருத்தணி போலீசார் மூவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

