/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சின்னாபின்னமான ஊத்துக்கோட்டை --- ஜனப்பன்சத்திரம் சாலை: 'பேட்ச் ஒர்க்' செய்வதால் வாகன ஓட்டிகள் அவதி
/
சின்னாபின்னமான ஊத்துக்கோட்டை --- ஜனப்பன்சத்திரம் சாலை: 'பேட்ச் ஒர்க்' செய்வதால் வாகன ஓட்டிகள் அவதி
சின்னாபின்னமான ஊத்துக்கோட்டை --- ஜனப்பன்சத்திரம் சாலை: 'பேட்ச் ஒர்க்' செய்வதால் வாகன ஓட்டிகள் அவதி
சின்னாபின்னமான ஊத்துக்கோட்டை --- ஜனப்பன்சத்திரம் சாலை: 'பேட்ச் ஒர்க்' செய்வதால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 02, 2024 11:08 PM

ஊத்துக்கோட்டை:போக்குவரத்து மிகுந்த சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள மரண பள்ளங்களில், புதிய சாலை அமைக்காமல், இரண்டாவது முறையாக, 'பேட்ச் ஒர்க்' மட்டும் செய்து கணக்கு முடிக்கும் அதிகாரிகளின் செயலால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை - -- ஜனப்பன்சத்திரம் இடையே, 30 கி.மீட்டர் துாரம் கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலைத் துறை - எஸ்.எச். 51 வசம் இருந்தது.
இந்த சாலையில் மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய முக்கிய ஊர்கள் உள்ளன.
இதில் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில் தேர்வாய் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. இதில் தற்போது அதிகளவு தொழிற்சாலைகள் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இது பயன்பாட்டிற்கு வரும் நிலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கு நிலை ஏற்படும்.
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் மேற்கண்ட சாலையில் பயணிக்கின்றன.
தினமும், 15,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கின்றன.
குறிப்பாக, இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலை பெருமளவு குண்டும், குழியுமாக உள்ளது. தானாகுளம், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், ஆத்துப்பாக்கம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் மரண பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் பெருமளவு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த சாலை கடந்தாண்டு மார்ச் மாதம் தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் சாலை ஒப்படைப்பால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். விரைவில் புதிய தார் சாலை அமையும் என எதிர்பார்த்தனர்.
ஆனால், தார் சாலை அமைக்காமல் கடந்த அக்., மாத கடைசியில் மரண பள்ளங்களில், 'பேட்ச் ஒர்க்'மட்டும் செய்தனர். இதையும் அரைகுறையாக செய்ததால், தார் சாலை அடுத்த சில தினங்களில் பெயர்ந்தது.
இதனிடையே, 'மிக்ஜாம்' புயல் காரணமாக பெய்த பலத்த மழையால், ஊத்துக்கோட்டை ஜனப்பன்சத்திரம் இடை யே சாலை சின்னாபின்னமானது.
இதில் வாகனங்கள் ஊர்ந்தும், வளைந்து நெளிந்தும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போதாவது அதிகாரிகள் தார் சாலை அமைப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும், 'பேட்ச் ஒர்க்' பணி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை ஜனப்பன்சத்திரம் இடை யே, தார் சாலை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
----------ஊத்துக்கோட்டை -ஜனப்பன்சத்திரம் இடை யே, தற்போது, சாலை மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே உள்ள மரண பள்ளங்களில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படுகிறது.
குறிப்பாக, இரவு நேரங்களில் பள்ளங்கள் எங்கு உள்ளது என்பது தெரிவதில்லை. பள்ளங்களில் சிக்கி விபத்து ஏற்படாமல் இருக்க பக்கவாட்டு பகுதிகளில் வாகனங்களை திருப்பும்போது, அங்கு செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. 30 கி.மீ., துாரத்தை கடக்க இரவு நேரங்களில் இரண்டு மணி நேரம் ஆகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.