/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருப்பாச்சூர், பள்ளிப்பட்டு ஆற்றில் உயர்மட்ட பாலம்... நிம்மதி! : ரூ.22 கோடி நிதி ஒதுக்கி மத்திய அமைச்சர் உத்தரவு
/
திருப்பாச்சூர், பள்ளிப்பட்டு ஆற்றில் உயர்மட்ட பாலம்... நிம்மதி! : ரூ.22 கோடி நிதி ஒதுக்கி மத்திய அமைச்சர் உத்தரவு
திருப்பாச்சூர், பள்ளிப்பட்டு ஆற்றில் உயர்மட்ட பாலம்... நிம்மதி! : ரூ.22 கோடி நிதி ஒதுக்கி மத்திய அமைச்சர் உத்தரவு
திருப்பாச்சூர், பள்ளிப்பட்டு ஆற்றில் உயர்மட்ட பாலம்... நிம்மதி! : ரூ.22 கோடி நிதி ஒதுக்கி மத்திய அமைச்சர் உத்தரவு
ADDED : ஜன 05, 2025 08:19 PM

கடம்பத்துார்:கூவம் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி மற்றும் பள்ளிப்பட்டு - திருத்தணி இடையேயுள்ள தரைப்பாலங்கள் மூழ்குகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் மேற்கண்ட இடங்களில் உயர்மட்ட பாலம் கட்ட, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்தரை ஊராட்சி. இப்பகுதியில், சத்தரை கண்டிகை வழியாக, கொண்டஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலையில், கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
இந்த பாலத்தை பயன்படுத்தி, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், தண்டலம், அரக்கோணம் சென்று வருகின்றனர். தினம் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த 2016, 2021, 2022, 2023ம் ஆண்டு என, நான்கு முறை தரைப்பாலம் சேதமடைந்தும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளப்பெருக்கில் ஐந்தாவது முறையாக தரைப்பாலம், வெள்ளநீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ்கூட வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல, பள்ளிப்பட்டு - திருத்தணி நெடுஞ்சாலையில் சாமந்தவாடா பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலமும், அடிக்கடி சேமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு, கொண்டஞ்சேரியில் தரைப்பாலங்கள் பதிலாக, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் சத்தரை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் கூவம், கொசஸ்தலை ஆற்று பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவானது.
இதற்காக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இரு இடங்களிலும் மத்திய சாலை உள்கட்டமைப்பு சார்பில் மண் பரிசோதனை செய்து, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டது.
கொண்டஞ்சேரி -- சத்தரை இடையில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே 150 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்தில் 14 கோடி ரூபாயில் பாலம் கட்டப்பட உள்ளது.
அதேபோல, பள்ளிப்பட்டு - பொதட்டூர்பேட்டை - திருத்தணி நெடுஞ்சாலையில் சாமந்தவாடா பகுதி கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 104 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்தில் 8 கோடி ரூபாய் உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது.
இந்த இரு பணிகளுக்காக, மொத்தம் 22 கோடி ரூபாயை வழங்குவதாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, இரு தினங்களுக்கு முன் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, தமிழக அரசிடமிருந்து உத்தரவு மற்றும் நிதி ஒதுக்கீடு வந்தவுடன், உயர்மட்ட மேம்பால பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.