/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்- செங்கல்பட்டு வழித்தடத்தில் போதிய பேருந்துகள் இயக்காததால் தவிப்பு 'லிப்ட்' கேட்டு காத்துக்கிடக்கும் மாணவ - மாணவியர்
/
திருவள்ளூர்- செங்கல்பட்டு வழித்தடத்தில் போதிய பேருந்துகள் இயக்காததால் தவிப்பு 'லிப்ட்' கேட்டு காத்துக்கிடக்கும் மாணவ - மாணவியர்
திருவள்ளூர்- செங்கல்பட்டு வழித்தடத்தில் போதிய பேருந்துகள் இயக்காததால் தவிப்பு 'லிப்ட்' கேட்டு காத்துக்கிடக்கும் மாணவ - மாணவியர்
திருவள்ளூர்- செங்கல்பட்டு வழித்தடத்தில் போதிய பேருந்துகள் இயக்காததால் தவிப்பு 'லிப்ட்' கேட்டு காத்துக்கிடக்கும் மாணவ - மாணவியர்
ADDED : ஆக 11, 2025 11:07 PM

சிங்கபெருமாள் கோவில், திருவள்ளூர்- செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் வழித்தடத்தில் போதிய அளவில் பேருந்துகள் இயக்காததால், மாணவ - மாணவியர் ஆபத்தான முறையில், 'பைக்'குகளில் 'லிப்ட்' கேட்டும், ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்தும் பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீ பெரும்புதுார் நெடுஞ்சாலையை ஒட்டி திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர், வடக்குபட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதிகளும் உள்ளன.
இந்த தடத்தில், செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து, தடம் எண் '82சி' அரசு பேருந்து, செங்கல்பட்டு -- திருவள்ளூர் வரை சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆப்பூர், தெள்ளிமேடு, சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ -- மாணவியர் மாத்துார், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இந்த பேருந்தில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தடத்தில் தொடர்ந்து ஆப்பூர், தெள்ளிமேடு பேருந்து நிறுத்தங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில், பேருந்துகள் நிறுத்தப்படுவது இல்லை எனவும், இஷ்டம் போல பேருந்துகள் இயக்கப்படுவதாவும் மாணவ -- மாணவியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திங்கட்கிழமைகளில், ஆப்பூர் பேருந்து நிறுத்தத்தில் காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை, திருவள்ளூர் செல்லும் பேருந்துகள் நிற்காமல் செல்வதால், ஆப்பூரில் இருந்து மாத்துார் அரசு பள்ளிக்குச் செல்லும் மாணவ - -மாணவியர், முன் பின் தெரியாதவர்களிடம், பைக்குகளில் 'லிப்ட்' கேட்டும், ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்தும் ஆபத்தான முறையில் செல்லும் நிலை உள்ளது. சிலர், பள்ளிக்குச் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிகை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
காலை மற்றும் மாலை நேரத்தில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதாலும், நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாலும், இந்த பகுதியில் இருந்து தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்வோர், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
இங்கு தங்கியுள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் தொழிற்சாலைகளில் வேலை செய்வோர், வார இறுதி நாட்களில் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று, திங்கட்கிழமை நேரடியாக அதிகாலை தொழிற்சாலைக்கு வர பரனுார் சுங்கச்சாவடி, சிங்கபெருமாள் கோவிலில் இருந்து, திருவள்ளூர் செல்லும் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
இதனால் காலை 9:00 மணி வரை, திருவள்ளூர் செல்லும் பேருந்துகளில் அதிக கூட்டமாகவே உள்ளன. எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிங்கபெருமாள் கோவில் -- திருவள்ளூர் தடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில், பேருந்துகளில் அதிக அளவில் நெரிசல் உள்ளது. தொழிற்சாலைகளுக்கு துாய்மை பணி, தோட்ட பணிகளுக்கு வேலைக்குச் செல்வோர் தாமதமாக செல்வதால், தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை, அபராத கட்டணமாக செலுத்தும் நிலை உள்ளது. எனவே, மற்ற தடங்களில் உள்ளது போல, இந்த தடத்திலும் மகளிர் இலவச பேருந்து மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - இ.திவ்யா, சிங்கபெருமாள் கோவில்

