/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி மந்தம்: ஐந்து மாதங்களில் முடிவது சந்தேகமே!
/
திருவள்ளூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி மந்தம்: ஐந்து மாதங்களில் முடிவது சந்தேகமே!
திருவள்ளூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி மந்தம்: ஐந்து மாதங்களில் முடிவது சந்தேகமே!
திருவள்ளூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி மந்தம்: ஐந்து மாதங்களில் முடிவது சந்தேகமே!
UPDATED : ஆக 22, 2025 02:24 AM
ADDED : ஆக 22, 2025 02:21 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம், அம்ருத் பாரத் திட்டத்தில் 28 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணி 2 ஆண்டுகளாகியும் முடிவடையாமல் உள்ளது. ரயில்வே அதிகாரிகள் 5 மாதத்தில் நிறைவேற்ற உத்தரவிட்டும், பணி துவக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ரயில் பயணியர் அதிருப்தியடைந்துள்ளர்.
![]() |
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ஆறு நடைமேடைகளைக் கொண்ட இந்த ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் 1.40 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
காக்களூர், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், மப்பேடு போன்ற பகுதிகளில் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களும், வேலை, கல்வி, மருத்துவம், வெளியூர் செல்வோர் பயணிக்க, 160 நடை புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்கின்றன.
மேலும், 11 ஜோடி விரைவு ரயில்கள் திருவள்ளூரில் நின்று செல்கின்றன.
ஆண்டுக்கு, 15 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வரும் திருவள்ளூர் ரயில் நிலையம், கிரேடு 2 அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆனால், வருவாய் அதிகம் கிடைத்தும், கிரேடு 2வுக்கான எவ்வித முன்னேற்றமும் ரயில் நிலையத்தில் இல்லை.
இந்நிலையில், மத்திய அரசின் 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், திருவள்ளூர் ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, 28 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2023ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் மேம்பாட்டு பணி துவங்கியது.
பணி துவங்கிய ஒரு ஆண்டுக்குள் நிறைவு பெறும் என அப்போது ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, ரயில் நிலையம் அருகில் இருந்த பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டது. தொடர்ந்து, பிரம்மாண்டமான நுழைவு வாயில், ஆறு நடைமேடைகளையும் இணைக்கும் வகையில், நடைமேம்பாலம், 1,2 மற்றும் 3வது நடைமேடைகளின் கூரைகள் நீட்டிப்பு, முதல் மற்றும் 6வது நடைமேடையில் 'லிப்ட்' அமைக்கும் பணி மற்றும் நடைமேடைகள் புதுப்பிப்பு போன்ற பணிகள் துவங்கின.
ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும், பணிகள் நிறைவடையாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. நுழைவு வாயில் மற்றும் நடைமேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த ஆறு மாதமாக பாதியில் நிற்கிறது.
நடைமேடை புதுப்பிக்கும் பணியும், அரைகுறையாக உள்ளது. 'லிப்ட்' அமைக்கும் பணியும், நிறுத்தப்பட்டு விட்டது. அரைகுறையாக நடைபெற்ற மேம்பாட்டு பணியால், ரயில் நிலையத்திற்கு வரும் பயணியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங், சமீபத்தில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணியை ஆய்வு செய்தார். ஐந்து மாதத்திற்குள் பணிகளை நிறைவேற்றுமாறு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுச் சென்றார்.
ஆனால், அவர் உத்தரவிட்டும், இதுவரை எவ்வித பணியும் துவக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், 5 மாதத்திற்குள் பணிகள் நிறைவடைவது சந்தேகமே என, ரயில் பயணியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வருவாய் அதிகம்; குறைகள் ஏராளம்
திருவள்ளூர் ரயில் நிலையம், ஆண்டுக்கு 15 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டித்தந்தாலும், ரயில் பயணியருக்கு போதிய வசதிகள் எதையும் ரயில்வே துறை செய்து கொடுக்கவில்லை. தற்போது நடைபெற்றும் மேம்பாட்டு பணியும் ஆமை வேகத்தில் தான் நடக்கிறது. அதிக ரயில்கள் நின்று செல்லும், 2,3வது நடைமேடையில், கூரை நீட்டிக்க வேண்டும். அனைத்து நடைமேடைகளிலும், 'எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே' அமைக்க வேண்டும்.
ரயில் வருகை, புறப்பாடு குறித்து அறிவிக்கப்படும் 'ஸ்பீக்கர்'களை நவீனப்படுத்த வேண்டும். மேலும், திருவள்ளூர் வழியாக, 60 விரைவு ரயில்கள் கடந்து சென்றும், வெறும் 11 ரயில்கள் மட்டுமே நிறுத்தப்படுகிறது. ரயில் பயணியர் வசதி கருதி, 3ல் ஒரு பங்கு அதாவது 20 விரைவு ரயில்களாவது நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.பாஸ்கர், செயலர் திருவள்ளூர் ரயில் பயணியர் சங்கம்.