/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் சுற்றுலாப் பயணியர் ஜாலி
/
பழவேற்காடில் சுற்றுலாப் பயணியர் ஜாலி
ADDED : ஜன 02, 2025 01:51 AM

பழவேற்காடு:வங்காள விரிகுடா கடலை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவப் பகுதி அமைந்து உள்ளது. இங்குள்ள கடற்கரை அழகை ரசிக்கவும், குளித்து விளையாடவும் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலாப் பயணியர் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
ஆங்கல புத்தாண்டை முன்னிட்டு, நேற்று காலை முதல், கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணியர் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். சிறுவர்கள், இளைஞர்கள், கடலில் குளித்து பொழுதை ஜாலியாக கழித்தனர்.
மேகமூட்டம் மற்றும் பனிக்காற்று வீசியதை தொடர்ந்து, சுற்றுலாப் பயணியர் நீண்டநேரம் கடற்கரையில் இருப்பதை தவிர்த்து சிறிது நேரத்தில், அங்கிருந்து வெளியேறினர்.
கலங்கரை விளக்கம், டச்சு கல்லறைகள் உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டு சென்றனர். சுற்றுலாப் பயணியரின் வருகையால், பழவேற்காடு பஜார் பகுதியில் தேநீர் மற்றும் உணவகங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
படகு சவாரிக்கு போலீசார் தடை விதித்து, மீனவ கிராமங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தனர். அதை, மீனவ கிராமத்தினர் பின்பற்றினர். மேலும், வழக்கமாக தொழிலுக்கு செல்பவர்களும் நேற்று, மீன்பிடி தொழிலுக்கு செல்வதை தவிர்த்திருந்தனர்.
இதனால், மீனவர்களின் படகுகள் ஏரிக்கரைகளில் ஓய்வெடுத்தன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் மீன் இறங்குதளம், மீன் விற்பனை கூடம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன.
படகு சவாரி நடைபெறாமல், போலீசார் ஏரிப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.