/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஜார் பகுதியில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு ஊத்துக்கோட்டையில் தொடரும் நெரிசல்
/
பஜார் பகுதியில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு ஊத்துக்கோட்டையில் தொடரும் நெரிசல்
பஜார் பகுதியில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு ஊத்துக்கோட்டையில் தொடரும் நெரிசல்
பஜார் பகுதியில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு ஊத்துக்கோட்டையில் தொடரும் நெரிசல்
ADDED : செப் 06, 2025 01:29 AM

ஊத்துக்கோட்டை:போக்குவரத்து நிறைந்த ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால், தினமும் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பன்சத்திரம், கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. இந்த சாலை வழியாக தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் இரண்டு பக்கமும், வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால், காலை - இரவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பாதசாரிகள், மாணவர்கள் நடக்க முடியாத நிலை உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன், பைக்கில் குழந்தையுடன் சென்ற தம்பதி மீது லாரி உரசியதில், அவர்கள் கீழே விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
இதனால், பைக்கில் வந்தவருக்கும், லாரி ஓட்டுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
இரு நாட்களுக்கு முன், ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு ஆய்வு செய்ய மாவட்ட எஸ்.பி., விவேகானந்தன் சுக்லா சென்றார்.
அப்போது, அண்ணாதுரை சிலை அருகே ஏற்பட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார்.
பின், பாதுகாப்பிற்கு வந்த போலீசார் எஸ்.பி., வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அதன்பின், எஸ்.பி., வாகனம் சென்றது.
இப்பிரச்னை குறித்து நெடுஞ்சாலை, காவல், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.