/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடலில் மூழ்கி 4 பெண்கள் பரிதாப பலி எண்ணுாரில் சோகம்
/
கடலில் மூழ்கி 4 பெண்கள் பரிதாப பலி எண்ணுாரில் சோகம்
கடலில் மூழ்கி 4 பெண்கள் பரிதாப பலி எண்ணுாரில் சோகம்
கடலில் மூழ்கி 4 பெண்கள் பரிதாப பலி எண்ணுாரில் சோகம்
ADDED : நவ 01, 2025 12:37 AM

எண்ணுார்: எண்ணுார் பகுதியில் கடலில் மூழ்கி நான்கு பெண்கள் உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி, பெத்திகுப்பம் - இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் தேவகி, 28. இவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள 'டெக்ஸ்டைல்ஸ்' கடையில் பணிபுரிந்தார்.
இவருடன், நம்பாளையத்தைச் சேர்ந்த பவானி, 19, திருவல்லி காலனி பகுதியைச் சேர்ந்த காயத்ரி, 17, கும்மிடிப்பூண்டி, பெரிய கோபாலபுரத்தைச் சேர்ந்த ஷாலினி, 18, ஆகியோர் பணிபுரிகின்றனர்.
இதில், ஷாலினி பொன்னேரி அரசு கலைக் கல்லுாரியின் பி.காம்., இரண்டாம் ஆண்டு மாணவி; பகுதி நேரமாக கடையில் பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் தோழியர் நான்கு பேரும், எண்ணுார் - பெரியகுப்பம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு, துாண்டில் வளைவு பகுதியில் அமர்ந்து, நான்கு பேரும் குளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அலையின் சீற்றத்தால் கடலில் நிலைதடுமாறி விழுந்த நான்கு பேரும், நீச்சல் தெரியாததால், ஒருவர்பின் ஒருவராக கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.
சிறிது நேரத்திலேயே நான்கு பேரும் உயிரிழந்த நிலையில், உடல்கள் அடுத்தடுத்து பெரியகுப்பம் கடற்கரையிலேயே கரை ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள், எண்ணுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்கள் அமர்ந்திருந்த துாண்டில் வளைவு பகுதியில், பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
வெகுநேரமாக, உடல்களை கொண்டு செல்ல வாகனங்கள் வராததால், கடற்கரையிலேயே கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அதேநேரம், இறந்தவர்களின் உடலை பார்க்க, ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு மணி நேரம் கழித்து, நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
ஒரே நேரத்தில், நான்கு பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், எண்ணுாரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

