/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் ரயில்வே போலீஸ் நிலையம் அமைக்க ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
/
கும்மிடியில் ரயில்வே போலீஸ் நிலையம் அமைக்க ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
கும்மிடியில் ரயில்வே போலீஸ் நிலையம் அமைக்க ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
கும்மிடியில் ரயில்வே போலீஸ் நிலையம் அமைக்க ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : மார் 11, 2024 07:20 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில்களின் முனையமாகும். கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தினசரி, 40க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் தினசரி பல்லாயிரக்கணக்கான பயணியர் பயணித்து வருகின்றனர்.
மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் மதிப்பில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் நவீன மயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளும்
மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், அண்மையில் நடந்த குற்ற சம்பவங்கள் ரயில் பயணியரை அச்சமடைய செய்துள்ளது.
சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில், புறநகர் மின்சார ரயிலில், கும்மிடிப்பூண்டி நோக்கி நான்கு இளைஞர்கள் பயணித்தனர்.
கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறிய மூன்று மர்ம நபர்கள், அந்த நான்கு பேரை கத்தியால் தாக்கி மொபைல்போன், பணத்தை பறித்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் முன்பாக ரயிலை நிறுத்துவதற்கான செயினை பிடித்து இழுந்து தப்பி சென்றனர்.
கடந்த ஜனவரி மாதம், 14ம் தேதி, கவரைப்பேட்டை - கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மேகநாதன் என்பவரை, இரு மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி மடிக்கணினி மற்றும் மெபைல்போனை பறித்து சென்றனர்.
மேற்கண்ட இரு சம்பவங்கள் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், ஏராளமான சம்பவங்கள் வெளியே தெரிய வராமல் இருப்பதாக ரயில் பயணியர் தெரிவிக்கின்றனர்.
அதற்கு முக்கிய காரணம், வெகு தொலைவில் கொருக்குப்பேட்டை ரயில் போலீஸ் நிலையம் இருப்பதே என தெரிவிக்கின்றனர்.
உதாரணத்திற்கு ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் விபத்து அல்லது வழிபறி சம்பவம் நடந்தால், அங்கிருந்து, 58 கி.மீ., தொலைவில் உள்ள கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு புகார்தாரர் செல்ல வேண்டும்.
மேலும், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், நீண்ட துார ரயில் பாதையில் கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஆள் பற்றாக்குறை இருப்பதால், பொன்னேரியில் உள்ள புறகாவல் நிலையத்தையும் முறையாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
அனைத்து வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டு வரும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்.
அப்படி அமைத்தால், மீஞ்சூரில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி முதல் ஆரம்பாக்கம் வரை உள்ள, 36 கி.மீ., தொலைவை எளிதாக கண்காணித்து ரயில் பயணியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஏதுவாக இருக்கும் என ரயில் பயணியர் எதிர்ப்பார்க்கின்றனர்.

