ADDED : ஜூலை 31, 2025 01:08 AM

ஆர்.கே.பேட்டை:நான்கு வழிசாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலையில், தற்போது புதிய மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ஆர்.கே.பேட்டையில் இருந்து அஸ்வரேவந்தாபுரம் வழியாக சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக அஸ்வரேவந்தாபுரம் முதல் கோபாலபுரம் வரையிலான 6 கி.மீ., துாரம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்க பணிகளுக்காக, சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. நான்கு வழி சாலை பணிகளில் தற்போது மைய தடுப்பான் அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. வரும் பிப்., மாதத்திற்குள் பணிகள் முழுமை அடையும்.
அதே நேரத்தில் விரிவாக்க பணிகளுக்காக வெட்டி அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக புதிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, நெடுஞ்சாலை துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மரக்கன்றுகளுக்கு நிழல்வேலியும் அமைக்கப்பட்டுள்ளன. 10 அடி உயரத்திற்கும் மேலான இந்த மரக்கன்றுகள் தற்போது வேரூன்றி வளர துவங்கியுள்ளன. சாலைவிரிவாக்க பணிகள் நிறைவுபெற்று பொதுபயன்பாட்டிற்கு வரும் முன், இந்த மரக்கன்றுகள் நிழல் தரும் மரங்களாக வளர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.