/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழங்குடியினர் மாணவர் விடுதி 8 மாதமாகியும் திறக்காத அவலம்
/
பழங்குடியினர் மாணவர் விடுதி 8 மாதமாகியும் திறக்காத அவலம்
பழங்குடியினர் மாணவர் விடுதி 8 மாதமாகியும் திறக்காத அவலம்
பழங்குடியினர் மாணவர் விடுதி 8 மாதமாகியும் திறக்காத அவலம்
ADDED : நவ 03, 2025 10:27 PM

திருத்தணி:  புச்சிரெட்டிப்பள்ளி பகுதியில், 2.65 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் மாணவர் விடுதி, எட்டு மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக -பொருளாதார நிலையை உயர்த்தவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகள் ஏற்படுத்தி, மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இங்கு படிக்கும் பழங்குடியின மாணவர்கள், நீண்ட துாரம் பயணம் செய்து கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், மாணவர்கள் தங்கி படிக்க விடுதி அமைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகம் சார்பில், புச்சிரெட்டிப்பள்ளி அரசு பள்ளி வளாகத்தில் பழங்குடியின மாணவர் தங்கும் விடுதி அமைக்க, 2.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கடந்தாண்டு பணி துவங்கியது.
கடந்த பிப்ரவரி மாதம், பயிலகம், கற்றல் - கற்பித்தல் அறை, விளையாட்டு கூடம், சமையலறை ஆகியவற்றுடன் கூடிய புதிய விடுதி கட்டி முடிக்கப்பட்டது. இதில், 50 மாணவர்கள் வரை தங்கலாம். ஆனால், எட்டு மாதங்களாகியும், தற்போது வரை திறப்பு விழா காணாமல் பூட்டியே கிடக்கிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் பழங்குடியினர் மாணவர் நலன் கருதி, பழங்குடியினர் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட உயரதிகாரி கூறியதாவது:
பழங்குடியின மாணவர் விடுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு தயாரிக்கவும், உணவு வழங்கவும் போதிய உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு நிதி ஒதுக்கவில்லை. மேலும், இருக்கை வசதிகளுக்கும் நிதி ஒதுக்கவில்லை. இதனால், விடுதி திறப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

