/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.2.88 கோடியில் கட்டப்பட்ட சுனாமி குடியிருப்புகள் வீணானது! முட்புதர்கள் சூழ்ந்து புதைந்து போன அவலம்
/
ரூ.2.88 கோடியில் கட்டப்பட்ட சுனாமி குடியிருப்புகள் வீணானது! முட்புதர்கள் சூழ்ந்து புதைந்து போன அவலம்
ரூ.2.88 கோடியில் கட்டப்பட்ட சுனாமி குடியிருப்புகள் வீணானது! முட்புதர்கள் சூழ்ந்து புதைந்து போன அவலம்
ரூ.2.88 கோடியில் கட்டப்பட்ட சுனாமி குடியிருப்புகள் வீணானது! முட்புதர்கள் சூழ்ந்து புதைந்து போன அவலம்
ADDED : ஏப் 16, 2024 05:56 AM

பழவேற்காடு: பழவேற்காடில், மீனவர்களின் தொழில் வாழ்வாதாரத்திற்கு ஏற்ப சரியான திட்டமிடல் இன்றி, 2.88 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 101 சுனாமி குடியிருப்புகள் பயன்பாடு இன்றி, பாழடைந்து வீணாகின. மீனவர்கள் குடியேறாததால், புதர் மண்டி விஷ ஜந்துக்கள் தஞ்சமடைந்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவப்பகுதியில், சுனாமிக்கு பின் வாழ்வாதார திட்டத்தின் வாயிலாக கடந்த, 2007ல், மீனவ கிராமங்களில் 2,226 சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
அதில், பழவேற்காடு கோரைக்குப்பம் மீனவர்களுக்காக, தாங்கல் பெரும்புலம் கிராமத்தில், 101 குடியிருப்புகள் கட்டப்பட்டன.
மின் இணைப்பு
நான்கு தெருக்களில், இருபுறமும் வீடுகள், தார் சாலைகள், ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, தெருவிளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு வீட்டிற்கும், 2.85 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. குடியிருப்பு பகுதியில் சமுதாய கூடம், சத்துணவு கூடம், குடிநீர் மேல்நிலைத்தொட்டி ஆகியவையும் உருவாக்கப்பட்டன. ஒரு சிறு கிராமத்திற்கு தேவையான கட்டமைப்புகளுடன் இந்த சுனாமி குடியிருப்பு பகுதி அமைந்திருந்தது.
ஆனால், கோரைகுப்பம் மீனவர்கள், மேற்கண்ட புதிய குடியிருப்பு பகுதிக்கு குடியேற மறுத்துவிட்டனர். கோரைகுப்பம் மீனவர்கள் தற்போது கடற்கரையை ஒட்டி வசிக்கின்றனர்.
அங்கிருந்து மீன்பிடி தொழிலுக்கு செல்வது எளிதாக இருக்கும் நிலையில், இவர்களுக்காக கட்டப்பட்ட சுனாமி குடியிருப்புகள், வசிப்பிடத்திற்கும், புதிய குடியிருப்பு பகுதிக்கும் இடையில் உள்ள பஹிங்காம் கால்வாயை கடந்து சென்று வரவேண்டும்.
புதிய குடியிருப்பு பகுதியில் இருந்து நேரிடையாக கடலுக்கு செல்ல முடியாது எனவும், 15 கி.மீ சுற்றிக்கொண்டு முகத்துவாரம் வழியாக செல்லும்போது, கூடுதல் செலவினங்கள் ஏற்படும் எனக் கூறி, அங்கு குடியேற திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
வாழ்வாதாரம்
கோரைகுப்பம் மீனவர்கள், புதிய சுனாமி குடியிருப்பு பகுதிக்கு குடியேறாமல் போனதால், 101 வீடுகளும் வீணாகின. வீடுகளுக்கு போடப்பட்ட மின்கம்பங்கள், மின்சார ஒயர்கள், வீட்டின் உள்பகுதியில் மின்சாதன பொருட்கள் திருடு போயின.
கதவு, சன்னல், குடிநீர் குழாய்களும் உடைத்து சூறையாடப்பட்டன. தற்போதைய நிலையில், கட்டடங்கள் மட்டுமே புதர்களில் மறைந்து கிடக்கின்றன. இதனால், விஷ ஜந்துக்கள் தஞ்சமடைந்துள்ளன. கோரைகுப்பம் மீனவர்களுக்கு, தாங்கல் பெரும்புலம் கிராமத்தில் சுனாமி குடியிருப்புகள் அமைக்கும் போதே தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும், தொழிலுக்கு சென்று வருவதற்கு ஏற்றாற்போல் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். சரியான திட்டமிடல் இன்றி குடியிருப்புகள் கட்டப்பட்டதால், தற்போது பயனற்று கிடக்கிறது.
கோரைகுப்பம் மீனவர்கள் தற்போதும் கடற்கரையை ஒட்டி வசிக்கின்றனர். புயல் மழை காலங்களில் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு வீடும் பயன்பாடு இன்றி வீணாகி வருவது குறித்து ஆண்ட, ஆளும் அரசுகள் கண்டுகொள்ளாமல் உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கோரைகுப்பம் மீனவர்களுக்கு அவர்கள் தொழில் வசதிக்கு ஏற்றாற்போல் குடியிருப்புகளை ஏற்படுத்திடவும், வீணாகும் சுனாமி குடியிருப்புகளை வீடில்லாத ஏழை மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

