/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெவ்வேறு இடங்களில் இருவர் மர்ம மரணம்
/
வெவ்வேறு இடங்களில் இருவர் மர்ம மரணம்
ADDED : ஜூலை 15, 2025 09:19 PM
திருத்தணி:திருத்தணி அருகே, இரு வேறு இடங்களில் கல்லுாரி மாணவர், கட்டட மேஸ்திரி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
திருத்தணி அடுத்த வள்ளியம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், உடலில் ஆங்காங்கே சிராய்ப்பு காயங்கள் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
தகவலின்படி, நேற்று சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் அருகில் கிடந்த பையில் இருந்த அடையாள அட்டையை பார்த்த போது, தனியார் நர்சிங் கல்லுாரியில் படித்த, ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியைச் சேர்ந்த சுதாகர்,24, என தெரிந்தது.
தொடர்ந்து, தனியார் கல்லுாரியில் விசாரித்து, மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாணவன் சுதாகர், கடந்த இரு நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை எனவும் தெரிந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்
திருத்தணி அடுத்த லட்சுமாபுரம் பகுதியில், தனியார் பொறியியல் கல்லுாரி மற்றும் சொகுசு ஹோட்டல் நிறுவனத்திற்குச் சொந்தமான, காய்கறி மற்றும் பழங்கள் தோட்ட பண்ணை உள்ளது.
இந்த தோட்டத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன், 30 வயதுள்ள ஆண் ஒருவர், சொட்டூர் நீர் பாசன குழாய் வாயிலாக கழுத்தை இறுக்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
நேற்று காலை, தோட்டக் காவலர் பார்த்து, கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில் அவர், லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவா, 33, என்றும், கட்டட மேஸ்திரி வேலை செய்து வந்ததும் தெரிந்தது.
இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.