/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரு காவல் நிலையங்கள், உதவி ஆணையர் அலுவலகம் பொன்னேரியில் ஒரே கட்டடத்தில் இயங்குவதால் அவதி
/
இரு காவல் நிலையங்கள், உதவி ஆணையர் அலுவலகம் பொன்னேரியில் ஒரே கட்டடத்தில் இயங்குவதால் அவதி
இரு காவல் நிலையங்கள், உதவி ஆணையர் அலுவலகம் பொன்னேரியில் ஒரே கட்டடத்தில் இயங்குவதால் அவதி
இரு காவல் நிலையங்கள், உதவி ஆணையர் அலுவலகம் பொன்னேரியில் ஒரே கட்டடத்தில் இயங்குவதால் அவதி
ADDED : ஏப் 13, 2025 02:34 AM

பொன்னேரி:பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில் உள்ள ஆங்கிலேயர் கால கட்டடத்தில், பொன்னேரி காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. கட்டடம் பழுதடைந்ததை தொடர்ந்து, 2019ல் பொன்னேரி - செங்குன்றம் சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
அங்கு கீழ்தளத்தில், பொன்னேரி காவல் நிலையமும், முதல்தளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையமும் செயல்பட்டது. கடந்த 2024ல், பொன்னேரி காவல் நிலையம் ஆவடி கமிஷனரகத்துடன் இணைக்கப்பட்டது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பொன்னேரி, திருப்பாலைவனம், காட்டூர் காவல் நிலையங்களை உள்ளடக்கி, பொன்னேரி காவல் உதவி ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, உதவி ஆணையர் நியமிக்கப்பட்டார்.
உதவி ஆணையர் அலுவலகத்திற்கு தனி கட்டடம் ஏதும் இல்லாத நிலையில், தற்போது பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஒரு பகுதியில் இயங்குகிறது. ஒரே கட்டடத்தில், சட்டம் - ஒழுங்கு காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் செயல்படுகிறது.
இந்த சிறிய கட்டடத்தில், மூன்று பிரிவுகளும் செயல்படும் நிலையில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு பிரிவு ஆவணங்களை தனித்தனியாக பராமரிக்க வேண்டிய நிலையில், இடநெருக்கடியால் சிரமம் ஏற்படுகிறது.
உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., காவலர்கள், எழுத்தர், கணிணி பிரிவுகளுக்கு என, தனி அறைகளும் இல்லாமல் நெருக்கடியாக பணிபுரியும் சூழல் உள்ளது. குறிப்பாக, விசாரணை கைதிகளை பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
ஒரே கட்டடத்தில் இரண்டு காவல் நிலையங்கள், உதவி ஆணையர் அலுவலகம் செயல்படுவதால், புகார் கொடுக்க வருவோர் சிரமங்களை சந்திக்கின்றனர்.
அதே வளாகத்தில், தேவையான இடவசதி இருப்பதால், தனித்தனி வளாகங்களுடன் புதிய கட்டடங்கள் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

