ADDED : செப் 25, 2026 08:11 PM
மப்பேடு: மப்பேடு அருகே, பேருந்து நிலையம் அருகே, கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தப்பியோடிய இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம், கண்ணுார் ஊராட்சி பகுதியில், மப்பேடு – சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு, மப்பேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்குள்ள பேருந்து நிலையம் அருகே, நான்கு பேர் குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மப்பேடு போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கண்ணுார் பகுதியைச் சேர்ந்த விஷ்வா, 18, தருண், 21, விக்னேஷ், 18, ஆகாஷ், 18, என தெரிய வந்தது. இதில், விக்னேஷ், ஆகாஷ் ஆகிய இருவரும் தப்பியோடினர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், தருண், விஷ்வாவை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று கிளைச்சிறையில் அடைத்தனர்.
