/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல்...அதிகாரிகள் திணறல்!:திருவள்ளூரில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு
/
மின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல்...அதிகாரிகள் திணறல்!:திருவள்ளூரில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு
மின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல்...அதிகாரிகள் திணறல்!:திருவள்ளூரில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு
மின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல்...அதிகாரிகள் திணறல்!:திருவள்ளூரில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு
ADDED : ஜூன் 14, 2025 01:56 AM

திருத்தணி:திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்தில், ஐந்து மின்வாரிய செயற்பொறியாளர் பணியிடத்தில், தற்போது ஒருவர் மட்டுமே பணிபுரிவதால், நகரம் மற்றும் கிராமங்களில் மின்வினியோகம், சீரமைப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் செய்வதை தடுப்பதற்கும், புதிய மின்மாற்றிகள் அமைப்பதிலும் காலதாமதம் ஏற்படுவதால், மின்நுகர்வோர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் திருமழிசை ஆகிய மூன்று மின்வாரிய கோட்ட அலுவலகங்கள் இயங்கி வந்தன.
கடந்தாண்டு ஜூலை முதல் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டத்தில் இருந்து பிரித்து, திருவள்ளூர் மின்பகிர்மான வட்டமாக உருவாக்கப்பட்டு, திருத்தணி, திருவள்ளூர், திருமழிசை மின்வாரிய கோட்ட அலுவலகங்கள் சேர்க்கப்பட்டன.
இதன் கீழ், 42 துணை மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. திருவள்ளூர், திருமழிசை, திருத்தணி ஆகிய மூன்று கோட்ட அலுவலகங்களில், தலா ஒரு மின்வாரிய செயற்பொறியாளர், திருவள்ளூர் மின்பகிர்மான வட்ட அலுவலகத்தில் பொது மற்றும் தொழிற்நுட்பம் என, மொத்தம் ஐந்து செயற்பொறியாளர் பணியிடம் உள்ளது.
இதுதவிர, களஉதவியாளர், கம்பியாளர், மின்பாதை ஆய்வாளர், ஆக்கமுகவர், வணிக ஆய்வாளர், இளநிலை மற்றும் உதவி மின்வாரிய பொறியாளர் உள்ளிட்ட 1,350 பணியிடங்கள் உள்ளன.
இந்த பணியாளர்கள் வாயிலாக, மின் நுகர்வோர் மற்றும் தொழில் வழித்தடங்களில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான பிரச்னைகள், மின் வினியோகம், பழுது நீக்குவது, புதிய தடம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருமழிசை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மட்டும் மின்வாரிய செயற்பொறியாளர் பணியில் உள்ளார். மீதமுள்ள நான்கு மின்வாரிய செயற்பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்தில், கம்பியாளர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட 456 பணியிடங்கள் காலியாக இருப்பதால், மின் வினியோகம் தொடர்பான புகார்களை சரிசெய்ய முடியாமல், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
சில துணை மின் நிலையங்களில் உதவி பொறியாளர் பணியிடம், இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
இந்த மின்வாரிய அலுவலகம் சார்ந்த மின் நுகர்வோர் புகார் அளித்தாலும், மின்வாரிய அதிகாரிகள் சரியான பதில் அளிப்பதில்லை. மேலும், மின்வாரிய உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.
குறிப்பாக, குறைந்தழுத்த மின் வினியோகம், பியூஸ் போடுவது, மின் வழித்தடத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட மின் வினியோகம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் மின்வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை என, மின்நுகர்வோர் குற்றஞ் சாட்டுகின்றனர்.
கிராமப்புறங்களில் மின் வினியோகம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. சில நேரங்களில், 10 - 20 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
ஐந்து செயற்பொறியாளர்களின் பணியை ஒருவர் மட்டுமே செய்யும்போது, குறித்த நேரத்தில் மின்மாற்றிகள் பழுதுபார்த்தல், புதிதாக அமைத்தல் மற்றும் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுவது உள்ளிட்ட பணி பாதிக்கப்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் காலியாக உள்ள மின்வாரிய செயற்பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின்நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மின் பகிர்மான வட்டத்தில், 456 காலி பணியிடங்கள் உள்ளன. காலி பணியிடங்களின் விபரங்களை அரசிற்கு பரிந்துரை செய்துள்ளோம். அதை நிரப்புவதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இருக்கும் ஊழியர்களை வைத்து, பணிகளை முடிந்தளவுக்கு தொய்வில்லாமல் செய்து வருகிறோம்.
- மின்வாரிய அதிகாரி,
திருவள்ளூர்.