/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு உதவித்தொகை கிடைக்காமல்... தவிப்பு!:7,500 பேர் ஓராண்டாக காத்திருப்பு
/
அரசு உதவித்தொகை கிடைக்காமல்... தவிப்பு!:7,500 பேர் ஓராண்டாக காத்திருப்பு
அரசு உதவித்தொகை கிடைக்காமல்... தவிப்பு!:7,500 பேர் ஓராண்டாக காத்திருப்பு
அரசு உதவித்தொகை கிடைக்காமல்... தவிப்பு!:7,500 பேர் ஓராண்டாக காத்திருப்பு
ADDED : ஆக 29, 2024 02:27 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், ஒன்பது தாலுகாவில், அரசு உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த 7,500 பேர், அதற்கான ஆணை பெற்றும், நிதி பற்றாக்குறையால், ஓராண்டாக உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய ஒன்பது தாலுகா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இங்குள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம் வாயிலாக முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவனால் கைவிடப்பட்ட பெண் உள்ளிட்ட தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, மாதந்தோறும் தலா 1,200 ரூபாய் உதவித்தொகையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
அதேபோல், தகுதி வாய்ந்த உடல் ஊனமுற்றோர்களுக்கும், மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு பயனாளிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தும், மக்கள் தொடர்பு முகாம், மக்களை தேடி முதல்வர் திட்ட முகாம் ஆகியவற்றில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கின்றனர்.
கடந்த ஓராண்டாக உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. திருத்தணி தாலுகா- 890, பள்ளிப்பட்டு - 650, ஆர்.கே.பேட்டை - 700, பொன்னேரி - 1,100 பேர் என, ஒன்பது தாலுகாவிலும், 7,500 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை உதவித்தொகை பெற முடியாமல், தாலுகா அலுவலகங்களுக்கு தினந்தோறும் பயனாளிகள் சென்று, ஏமாற்றுத்துடன் திரும்பி வருகின்றனர்.
அவ்வாறு வரும் பயனாளிகளிடம், அதிகாரிகள் 'ஒரு மாதத்தில் உதவித்தொகை கிடைத்துவிடும்' எனக் கூறி அனுப்புகின்றனர். ஆனால், பயனாளிகள் வங்கிகளுக்கும், தாலுகா அலுவலகத்திற்கும் சென்று ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர்.
எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என, பயனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
@subtitle@ நிதி பற்றாக்குறை
இதுகுறித்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் கூறியதாவது:
அரசின் உதவித்தொகை பெற தகுதியான பயனாளிகள் விபரம் குறித்து ,மாதந்தோறும் பட்டியல் தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கிறோம்.
ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், ஆணைகள் பெற்ற பயனாளிகளுக்கு குறித்த காலத்திற்குள் எங்களால் உதவித்தொகை வழங்க முடியவில்லை.
இருப்பினும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் இறந்திருந்தால், அவர்கள் பெயர்களை நீக்கி, அதற்கு பதிலாக முன்னுரிமை அடிப்படையில் ஆணை பெற்றுள்ள பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறோம்.
போதிய நிதி வழங்கினால், அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனியாக வசித்து வரும் எனக்கு, வயது முதிர்வு காரணத்தால் விவசாய கூலிக்கு செல்ல முடியவில்லை. கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்தேன். ஆவணங்களை ஆய்வு செய்த பின், அதே மாதத்தில் ஆணை வழங்கினர். ஆனால், தற்போது வரை உதவித் தொகை கிடைக்கவில்லை. பலமுறை தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கேட்டும், உதவிதொகை கிடைக்காமல் அலைகழிக்கப்படுகிறேன்.
ஜி.பாப்பம்மாள், 70,
எஸ்.அக்ரஹாரம்,
கே.ஜி.கண்டிகை.
கடந்தாண்டு நடந்த மக்கள் தொடர்பு முகாமில், முதியோர் உதவி தொகை திட்டத்தில் விண்ணப்பம் கொடுத்தேன். வருவாய் துறை அதிகாரிகள் விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி, 11 மாதங்களுக்கு முன் உதவித்தொகைக்கான ஆணை வழங்கினர். ஆனால், தற்போது வரை வங்கி கணக்கில் உதவித் தொகை வரவு வைக்கப்படவில்லை.
ஆர்.தட்சணமூர்த்தி, 62.
பெரியகடம்பூர்.