/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டப்பணி... இழுத்தடிப்பு!; கட்சியினர் மார்தட்டி கொள்வதுதான் மிச்சம்
/
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டப்பணி... இழுத்தடிப்பு!; கட்சியினர் மார்தட்டி கொள்வதுதான் மிச்சம்
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டப்பணி... இழுத்தடிப்பு!; கட்சியினர் மார்தட்டி கொள்வதுதான் மிச்சம்
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டப்பணி... இழுத்தடிப்பு!; கட்சியினர் மார்தட்டி கொள்வதுதான் மிச்சம்
ADDED : ஏப் 08, 2024 07:20 AM

பொன்னேரி, ஏப். 8-
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், நான்கு ஆண்டுகளாக நடைபெற்று முடியாத நிலையில், ஆண்ட, ஆளும் கட்சிகள் திட்டத்தை தாங்கள் கொண்டு வந்தோம் என மார்தட்டி பிரசாரம் செய்து வருவதால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில், 27 வார்டுகளில், 69 கி.மீ., நீளத்தில் 237 தெருக்கள் உள்ளன. 2011ல் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின் 2019ல் பணிகள் துவங்கப்பட்டன.
முதல்கட்டமாக, 54.78 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 1 - 5 வரையிலான வார்டுகளை தவிர்த்து, மீதம் உள்ள, 22 வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கான பணிகள் நடைபெற்றன.
மேற்கண்ட வார்டுகளில் உள்ள தெருக்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், 'மேன்ஹோல்கள்' ஆகியவை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடிநீர் வடிகால்
பணிகள் துவங்கி நான்கு ஆண்டுகள் முடிந்தும் உள்ளது. இதுவரை திட்டப்பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. சாலைகளில் தற்போதும், பள்ளங்கள் தோண்டுவதும், அதை சரிவர மூடாமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதுமாக பணிகள் நடைபெறுகின்றன.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோ, 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால், தினமும், ஏதாவது ஒரு பகுதியில் திட்டப்பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
மேலும், பெரியகாவணம் பகுதியில் அமைந்து வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமான பணி இந்த ஆண்டு இறுதியில் முடியும் நிலையில் உள்ளது.
திருவாயற்பாடியில் இருந்து, பெரியகாவணம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் கொண்டு செல்ல ஆரணி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைத்து, அதன்மீது இரும்பு உருளைகள் பதிக்க வேண்டும். அதற்கான பணிகள் இதுவரை துவங்கவில்லை. கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பின் கிடைக்கும் தண்ணீரை, 3 கி.மீ., தொலைவில் உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டிற்கு அடுத்து உள்ள ஆற்றுப்பகுதியில் விட திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான பணிகளும் நடைபெறவில்லை.
மழைநீர்
நான்கு ஆண்டுகளாக ஜவ்வாக நடைபெற்று வரும் பணிகளால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி தவிக்கின்றனர். மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி தவிக்கின்றனர்.
இவ்வாறு பெரும்பாலான பணிகள் முடிவடையாமலும், துவங்கப்படாமலும் உள்ள நிலையில், திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு பொன்னேரி வரும் ஆளும், ஆண்ட கட்சி பிரமுகர்கள் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நாங்கள் தான் கொண்டு வந்தோம் எனவும், நாங்கள் தான் பணிகள் துரிதமாக மேற்கொண்டோம் எனவும் மார்தட்டிக்கொள்கின்றனர்.
பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால்வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி விரைவில் முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

