/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகள்...ஜவ்வு!: 5 ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் தவிப்பு
/
பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகள்...ஜவ்வு!: 5 ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் தவிப்பு
பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகள்...ஜவ்வு!: 5 ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் தவிப்பு
பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகள்...ஜவ்வு!: 5 ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் தவிப்பு
ADDED : ஆக 08, 2024 02:54 AM

பொன்னேரி,:பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், ஐந்து ஆண்டுகளாக மந்தகதியில் நடந்து வருகின்றன. இதற்காக, ஆங்காங்கே பள்ளம் தோண்டியிருப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் தவித்து வரும் நிலையில், நடப்பாண்டில் திட்டம் முடிக்கப்படுமா என எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியின் 27 வார்டுகளில், 237 தெருக்கள் உள்ளன. கடந்த 2011ல் இங்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்திற்கு, 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கழிவு நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றிற்கு இடம் தேடுவதில் ஏற்பட்ட தாமதத்தால், 2019ல் பணிகள் துவங்கப்பட்டன.
13 ஆண்டுகள்
திட்டம் அறிவிக்கப்பட்டு, எட்டு ஆண்டுகளுக்கு பின் பணிகள் துவங்கப்பட்டதால், திட்ட மதிப்பீடு தொகை அதிகரித்தது. தொடர்ந்து, இரண்டு கட்டங்களாக பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக, 54.78 கோடி ரூபாயில், நகராட்சிக்கு உட்பட்ட, 1 - 5 வரையிலான வார்டுகளை தவிர்த்து, மீதமுள்ள 22 வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தெருக்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், 'மேன்ஹோல்கள்' ஆகியவை பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
திட்டம் அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளும், பணிகள் துவங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தும் முழுமைபெறாமல் உள்ளன. இந்த சாலைகளில் தற்போதும் பள்ளங்கள் தோண்டுவதும், சிமென்ட் உருளைகள் பதிப்பதுமாக உள்ளன.
அதிகாரிகளை எப்போது கேட்டாலும், 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாக கூறுகின்றனர். தற்போது உள்ள நிலையில், கழிவு நீரேற்றும் நிலையத்தில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் செல்வதற்கான உருளைகள் பதிக்கப்படாமல் உள்ளன.
திருவாயற்பாடியில் இருந்து, பெரியகாவணம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் கொண்டு செல்ல, ஆரணி ஆற்றின் குறுக்கே இரும்பு உருளைகள் பதிக்க வேண்டும். அதற்கான பணிகள் இதுவரை துவங்கவில்லை.
கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பின் கிடைக்கும் தண்ணீரை, 3 கி.மீ., தொலைவில் உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டிற்கு அடுத்துள்ள ஆற்று பகுதியில்விட திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கும் பைப்லைன் அமைக்க வேண்டிய நிலையில், அதற்கான பணிகளும் நடைபெறவில்லை.
நடவடிக்கை
இவ்வாறு பெரும்பாலான பணிகள் முடிவடையாத நிலையே உள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணிகளால், பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல், சாலைகள் சேதம் ஆகியவற்றால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு, அவை சீரமைக்கப்படாமல் இருப்பதால், குடியிருப்புவாசிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.
எனவே, திட்டப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு, நடப்பாண்டிலாவது பயனுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறியதாவது:
சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமான பணிகள், கழிவு நீரேற்றும் நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிந்து, அங்கு மோட்டார் இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.
ஆரணி ஆற்றின் குறுக்கே குழாய் பதிக்க, நீர்வளத்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. அந்த அனுமதி பெற்றவுடன் அதற்கான பணிகள் நடைபெறும்.
பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. பிரதான சாலைகளில் விடுபட்ட பணிகள் தற்போது நடக்கின்றன.
அவையும், இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். நிச்சயம் இந்த ஆண்டு திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு கூறினார்.