/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துார் வாரப்படாத கால்வாயால் 20 ஏரிகளுக்கான...நீர்வரத்து பாதிப்பு: ஆரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம்
/
துார் வாரப்படாத கால்வாயால் 20 ஏரிகளுக்கான...நீர்வரத்து பாதிப்பு: ஆரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம்
துார் வாரப்படாத கால்வாயால் 20 ஏரிகளுக்கான...நீர்வரத்து பாதிப்பு: ஆரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம்
துார் வாரப்படாத கால்வாயால் 20 ஏரிகளுக்கான...நீர்வரத்து பாதிப்பு: ஆரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம்
ADDED : செப் 21, 2025 01:53 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள ஏ.என்.குப்பம் அணைக்கட்டு, மூன்று நாட்களாக நிரம்பி வழியும் நிலையில், கரையோர பகுதிகளில் மணல் மூட்டைகள் இல்லாததால், வெள்ள அபாய அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
மேலும், அணைக்கட்டில் இருந்து தனியாக பிரியும் பாசன ஏரிகளுக்கான வரத்து கால்வாயில் செடி, கொடிகள் படந்துள்ளதால், 20 ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளும், ஆரணி ஆற்றங்கரையோர பகுதி மக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தில் துவங்கி, நாகலாபுரம், பீச்சாட்டூர், தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி வழியாக, 108 கி.மீ., செல்லும் ஆரணி ஆறு, பழவேற்காடு ஏரியில் கலந்து வங்கக்கடலை சென்றடைகிறது.
ஆரணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கவரைப்பேட்டை அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள ஏ.என்.குப்பம் அணைக்கட்டு, மூன்று நாட்களாக நிரம்பி வழிகிறது.
அணைக்கட்டில் இருந்து பாசன ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய் தனியாக பிரிந்து செல்கிறது. அணைக்கட்டு நிரம்பும் போது, ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய் திறக்கப்படும்.
அதன் வாயிலாக, கீழ்முதலம்பேடு, பன்பாக்கம், பரணம்பேடு, ஏனாதிமேல்பாக்கம், அண்டவாயல், ஆவூர், சோம்பட்டு, கிளிக்கோடி உட்பட, 20 ஏரிகளுக்கு தண்ணீர் சென்றடையும்.
இந்த, 20 ஏரிகளின் பாசன நீரை நம்பி, 8,500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது, நீர்வரத்து கால்வாய் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாசன ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தாராளமாக செல்ல வேண்டிய தண்ணீர், தற்போது தடைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால், அடுத்த சில நாட்களில் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அணைக்கட்டு மற்றும் வெள்ள பாதிப்பு உள்ள கரையோர பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி வைப்பது வழக்கம். ஆனால், நடப்பாண்டு மணல் மூட்டைகள் வைக்கப்படவில்லை.
கடந்தாண்டு வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் கிழிந்து, அதன்மீது செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், வெள்ள அபாயம் உள்ள ஆரணி கரையோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கரையோர கிராம மக்களின் பாதுகாப்பு கருதி, அணைக்கட்டு மற்றும் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில், உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும்.
ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் இருந்து பிரிந்து செல்லும் பாசன ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாயை துார்வாரி கரையை பலப்படுத்த வேண்டும்.
அதற்கு, நீர்வளத்துறையினர் துரிதமாக செயல்பட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த சில நாட்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும். பாசன ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாயை துார்வார, மாவட்ட நிர்வாகத்திடம் கோரியுள்ளோம். சில நாட்களில் கால்வாயை துார்வாரி, கரையை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நீர்வளத் துறை அதிகாரி, கும்மிடிப்பூண்டி.