/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத ஏரிகள் புதருக்குள் மாயமாகி வரும் அவலம்
/
பராமரிப்பில்லாத ஏரிகள் புதருக்குள் மாயமாகி வரும் அவலம்
பராமரிப்பில்லாத ஏரிகள் புதருக்குள் மாயமாகி வரும் அவலம்
பராமரிப்பில்லாத ஏரிகள் புதருக்குள் மாயமாகி வரும் அவலம்
ADDED : நவ 04, 2024 02:07 AM

கடம்பத்துர்:திருவள்ளூர் மாவட்டத்தில், கூவம், கொசஸ்தலை, அடையாறு, ஆரணி ஆகிய ஆறுகளின் கீழ் நீர்வள துறை கட்டுப்பாட்டில் 586 ஏரிகள் மற்றும் ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 581 ஏரிகள் என மொத்தம் 1,167 ஏரிகள் உள்ளன.
இந்த ஏரிகளை நம்பி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
இதில் ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி வீணாகி வருகின்றன. மேலும் பல ஏரிகளுக்கு வரும் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் ஏரியில் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏரிகளில் துார் வாரும் பணி என்ற பெயரில் முறைகேடாக இஷ்டப்படி சவுடு மண் அள்ளப்பட்டதால் ஏரிகள் பள்ளத்தாக்காக மாறியுள்ளது.
இது ஏரிகளை நம்பியுள்ள விவசாயிகள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பல ஏரிகள் முறையான பராமரிப்பில் இல்லாததால் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி குடியிருப்புகளாகவும், விளை நிலங்களாகவும், சில ஏரிகள் குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,167 ஏரிகளில் 322 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக தண்ணீர் உள்ளது.
இதற்கு வரத்துக்கால்வாய்களை முறையாக சீரமைக்காததே காரணம் எனவும், ஏரிகளை பராமரிப்பில் அலட்சியம் காட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் சேகரமாகும் வகையில் வரத்து கால்வாய்களை சீரமைத்து முறையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதர் மண்டிய நீர் வரத்து கால்வாய்
கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் அமைந்துள்ளது பெரிய ஏரி. நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இந்த ஏரியிலிருந்து வெளியேறும் நீர் அழிஞ்சிவாக்கம் ஒட்டேரிக்கு செல்லும் வகையில் கால்வாய் உள்ளது.
இதில், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையோரம் உள்ள நீர் வெளியேறும் கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால், முட்செடிகள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது.
இந்த வரத்துக் கால்வாய் புதர் மண்டிக்கிடப்பதால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வரத்துக் கால்வாயை சீரமைக்க கோரி, பலமுறை நீர்வள ஆதாரத்துறையினரிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத் துறையினர், ஏரியில் இருந்து நீர் வெளியேறும் கால்வாயை கால்வாயை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.