/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் யூரியா தட்டுப்பாடு 1.10 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு
/
திருவள்ளூரில் யூரியா தட்டுப்பாடு 1.10 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு
திருவள்ளூரில் யூரியா தட்டுப்பாடு 1.10 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு
திருவள்ளூரில் யூரியா தட்டுப்பாடு 1.10 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு
ADDED : நவ 02, 2025 10:16 PM
பொன்னேரி: திருவள்ளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், யூரியா உரம் ஸ்டாக் இல்லை என்பதால், அதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டு மாவட்டம் முழுதும், 1.10 லட்சம் ஏக்கர் பரப்பு, நெற்பயிர்களின் வளர்ச்சி பாதித்து வருவதால், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், சம்பா, சொர்ணவாரி, நவரை பருவங்களில், 2.50 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. தற்போது சம்பா பருவத்தில், 1.10 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.
இதில், மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மட்டும், 84,000 ஏக்கர் பரப்பில் நடவு செய்யப்பட்டு, விவசாயிகள் களை எடுப்பு, மருந்தினங்கள் தெளிப்பு என, விவசாய பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
தற்போது நடவு செய்யப்பட்ட நிலங்களில், மழைக்கு பின் நெற்பயிர்கள் சீரான வளர்ச்சியில் உள்ளன. அவற்றிற்கு உரிய நேரத்தில் யூரியா உரம் தெளிக்க வேண்டும். இது நெற்பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
மாவட்டத்தில், 124 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக, 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை யூரியா, 266.50 ரூபாய்க்கு மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக யூரியா கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
விவசாயிகள் வேதனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங் களை அணுகினால், உரம் 'ஸ்டாக் இல்லை' எனக்கூறி விவசாயிகளை திருப்பி அனுப்புகின்றனர்.
தனியார் மருந்து கடைகளுக்கு சென்றால் அங்கும் 'ஸ்டாக் இல்லை' என கைவிரிக்கின்றனர். ஒரு சில கூட்டுறவு கடன் சங்கங்களில், திரவ வடிவில் 'நானோ' யூரியா விற்பனை செய்யப்படுகிறது. இதை விவசாயிகள் விரும்புவதில்லை.
உரிய நேரத்தில் யூரியா போடவில்லை என்றால், நெற்பயிர்களின் வளர்ச்சி பாதிக்கும் என, விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மாவட்டம் முழுதும் இதே நிலை இருப்பதால், உரிய நடவடிக்கை எடுத்து, யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மாவட்டம் முழுதும் இந்த பருவத்திற்கு, 9,900 டன் தேவைப்படும் நிலை உள்ளது. தற்போது இருப்பு மற்றும் இந்த மாத சப்ளை என, 6,380 டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றில், 4,565 டன் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
தற்போது கையிருப்பாக, 2,907 டன் இருப்பதாக கூறப்படுகிறது. 3,520 டன் தேவை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஒரு விவசாயி, 10 - 15 ஏக்கர் பயிர் செய்யும் நிலையில், அவருக்கு, 20 - 30 மூட்டை தேவைப்படுகிறது. ஆனால், 3 - 5 மூட்டை தருகின்றனர். தனியார் விற்பனை நிலையங்களை அணுகினால், ஒரு மூட்டை, 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதுடன், அங்கும் இதே நிலை தான் உள்ளது.
அடுத்து வரும் மழைக்குள் யூரியா தெளிக்கவில்லை என்றால், நெற்பயிர்களின் வளர்ச்சி முழுமையாக பாதிக்கும். மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தட்டுப்பாடு குறையும் இது குறித்து மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை மணலியில் உள்ள, எம்.எப்.எல்., நிறுவனத்தின் வாயிலாகவே யூரியா கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த, 20 நாட்களாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கு உற்பத்தி நடைபெறவில்லை. இதனால் யூரியா சப்ளை குறைந்து உள்ளது. இம்மாதம், 5ம் தேதிக்கு பின், உற்பத்தி துவங்க உள்ளதால், யூரியா தட்டுப்பாடு குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

