/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தீயணைப்பு நிலையம் முன் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
/
தீயணைப்பு நிலையம் முன் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஏப் 18, 2025 02:17 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில், பள்ளிப்பட்டு தீயணப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. பள்ளிப்பட்டு நகரில் போதிய இடவசதி இல்லாததால், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், சார் - பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.
இந்த அரசு அலுவலகங்கள், பள்ளிப்பட்டு நகருக்கு வெளியே உள்ள நகரி மற்றும் பொதட்டூர்பேட்டை சாலை அருகே, சொந்த கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில், தீயணைப்பு நிலையம் எதிரே, ஓராண்டுக்கு முன் பள்ளிப்பட்டு நீதிமன்றமும் இடமாற்றம் செய்யப்பட்டது.
பள்ளிப்பட்டு நீதிமன்றம் செயல்பட துவங்கியதில் இருந்து, இங்கு வருவோர் தங்கள் வாகனங்களை, நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள தீயணைப்பு நிலைய நுழைவாயில் பகுதியில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
அதேபோல், நீதிமன்ற வளாகத்தை ஒட்டி செயல்படும் உணவு பொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு வரும் லாரிகளும், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள், அந்தந்த அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்க, போதுமான 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.