/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
/
சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
ADDED : மார் 27, 2025 01:49 AM

திருமழிசை,:சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை, ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, 2018ல் துவக்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் வரையிலான 23 கி.மீ., சாலை விரிவாக்க பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.
இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் செல்லும் வகையில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு சாலை வழியாக தொழிற்சாலைகளுக்கு வரும் கனரகம் உள்ளிட்ட வாகனங்கள், இணைப்பு சாலையில் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால், இந்த இணைப்பு சாலையில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், இருவழிச் சாலையாக உள்ள இணைப்பு சாலை குறுகி, தற்போது ஒருவழி சாலையாக மாறியுள்ளதால், இவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் கடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், இணைப்பு சாலையில் 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகைகள் வைக்காததே காரணம் என, வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர்.
ஆவடி மாநகர போக்குவரத்து காவல் துறையினர், இணைப்பு சாலையில் உணவக பகுதியில் தங்களது ரோந்து வாகனத்தை நிறுத்துவதால், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு வழிவகுத்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில், இணைப்பு சாலையில் ஸ்ரீபெரும்புதுார் புறக்காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட லாரிகளை அகற்றுவதற்கு, போலீசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக குத்தம்பாக்கம், பாப்பரம்பாக்கம், செட்டிபேடு, தண்டலம், இருங்காட்டுகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு சாலை, 'பார்க்கிங்' ஏரியாவாக மாறியுள்ளது.
எனவே, இணைப்பு சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை தீர்க்க சம்பந்தப்பட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.