/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றில் கழிவுநீர் விடுவதற்கு எதிர்ப்பு பொன்னேரியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
/
ஆரணி ஆற்றில் கழிவுநீர் விடுவதற்கு எதிர்ப்பு பொன்னேரியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ஆரணி ஆற்றில் கழிவுநீர் விடுவதற்கு எதிர்ப்பு பொன்னேரியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ஆரணி ஆற்றில் கழிவுநீர் விடுவதற்கு எதிர்ப்பு பொன்னேரியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 06, 2025 01:31 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை, ஆரணி ஆற்றில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியிருப்புகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, ஆரணி ஆற்றில் விடுவதற்கு திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இதற்கான குழாய் பதிப்பு பணிகள் துவங்கியபோது, ஆரணி ஆற்றின் கரையோர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கழிவுநீர் கலப்பதால் ஆற்றுநீர் மாசடைந்து, வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி, கடந்த மாதம் போராட்டங்களில் ஈடுபட்ட, 120 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். போலீஸ் பாதுகாப்புடன், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன.
நேற்று ஆலாடு, தேவராஞ்சேரி, ஏருசிவன், லட்சுமிபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் ஆதிதமிழர் விடுதலை இயக்கத்தினர், மேற்கண்ட திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 'மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
'இல்லையெனில், வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துவோம்' என, தெரிவித்தனர்.
குப்பை கொட்ட எதிர்ப்பு மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமரெட்டிப்பாளையம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில், மீஞ்சூர் பேரூராட்சியின் குப்பை கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசஸ்தலை ஆற்றுநீர் பாதிப்பிற்கு உள்ளாவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றின் கரையோரங்களில் குப்பை கொட்டுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று குப்பை கழிவுகளுடன் வந்த பேரூராட்சி வாகனத்தை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது:
கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் முறையிட்டோம். அங்கு குப்பை கழிவுகள் கொட்ட கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும், பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து குப்பை கொட்டுகிறது.நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், குடியிருப்பு மக்களிடம் பேச்சு நடத்தினர். 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின், கலைந்து சென்றனர்.