/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்பு அகற்றாமல் துார்வாரப்படும் நீர்வரத்து கால்வாய்: விவசாயிகள் அதிருப்தி
/
ஆக்கிரமிப்பு அகற்றாமல் துார்வாரப்படும் நீர்வரத்து கால்வாய்: விவசாயிகள் அதிருப்தி
ஆக்கிரமிப்பு அகற்றாமல் துார்வாரப்படும் நீர்வரத்து கால்வாய்: விவசாயிகள் அதிருப்தி
ஆக்கிரமிப்பு அகற்றாமல் துார்வாரப்படும் நீர்வரத்து கால்வாய்: விவசாயிகள் அதிருப்தி
ADDED : அக் 06, 2025 11:19 PM

பொன்னேரி
அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், நீர்வளத் துறை அதிகாரிகள் நீர்வரத்து கால்வாயை துார்வாருவதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
பொன்னேரி அடுத்த அயநல்லுார் கிராமத்தில் இருந்து பனப்பாக்கம், பெரியகரும்பூர், குடிநெல்வாயல் வழியாக பழவேற்காடு உவர்ப்பு ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் துார்ந்தும், செடிகள் வளர்ந்தும் பராமரிப்பின்றி இருந்தது.
கால்வாயின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், 100 அடி அகலத்தில் இருந்து, 30 - 40 அடியாக சுருங்கியது. மழைக்காலங்களில், கால்வாயில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, சில நாட்களாக துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பனப்பாக்கம் கிராமத்தில் இருந்து, உப்பு நெல்வாயல் வரை, 4 கி.மீ., தொலைவிற்கு கால்வாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேசமயம், கால்வாயை முழுமையாக அளவீடு செய்து, இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஏற்கனவே எந்த நிலையில் இருந்ததோ, அதே அளவில் துார்வாரி சீரமைக்கப்படுவதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
கால்வாயின் பல்வேறு பகுதிகள் குறுகிவிட்டது. இதனால், மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, துார்வாரியும் பயனில்லை. பல்வேறு துறைகள் இணைந்து, பணிகளை மேற்கொள்வதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.
ஆனால், எந்தவொரு அளவீடும் செய்யாமல், கண்துடைப்பிற்காக துார்வாரப்படுகிறது. உரிய அளவீடுகள் செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.