/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வினாடிக்கு 1,940 கனஅடி பூண்டிக்கு நீர்வரத்து
/
வினாடிக்கு 1,940 கனஅடி பூண்டிக்கு நீர்வரத்து
ADDED : அக் 12, 2025 10:19 PM
ஊத்துக்கோட்டை:நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றால், பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு, 1,940 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வழியே வந்து கொண்டிருக்கிறது.
கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 1,600 கன அடி திறந்த நிலையில், ஆந்திர மக்களின் விவசாய தேவைக்கு போக வினாடிக்கு, 289 கன அடி மட்டுமே, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி நீர்த்தேக்க நிலவரம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் வினாடிக்கு, 1,670 கன அடி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 270 கன அடி என, மொத்தம் 1,940 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 700 கன அடி தண்ணீர், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், தற்போது, 2.660 டி.எம்.சி., நீர் உள்ளது. மொத்த நீர்மட்டம் 35 அடி. தற்போது 33.47 அடி உள்ளது.
தொடர் மழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்தால், விரைவில் முழு கொள்ளளவை அடையும் என, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து, நேற்று மாலை ௭:00 மணிக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், இரவு ௯:00 மணியளவில், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றை வந்தடையும் என்பதால், வருவாய் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிப்பட்டு வட்டாட்சியர் பாரதி உத்தரவின்படி, பெருமாநல்லுார், மேலப்பூடி, சொரக்காய்பேட்டை, புண்ணியம் உள்ளிட்ட கரையோர கிராமங்களில், 'தண்டோரா' வாயிலாக வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.