/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழை நீர் சேகரிப்பு திட்டம் தொய்வால் நீர்மட்டம் சரிவு...தண்ணீர் தட்டுப்பாடு: ஆண்டிற்கு 1,105 மி.மீ., மழை பொழிவு கிடைத்தும் வீண்
/
மழை நீர் சேகரிப்பு திட்டம் தொய்வால் நீர்மட்டம் சரிவு...தண்ணீர் தட்டுப்பாடு: ஆண்டிற்கு 1,105 மி.மீ., மழை பொழிவு கிடைத்தும் வீண்
மழை நீர் சேகரிப்பு திட்டம் தொய்வால் நீர்மட்டம் சரிவு...தண்ணீர் தட்டுப்பாடு: ஆண்டிற்கு 1,105 மி.மீ., மழை பொழிவு கிடைத்தும் வீண்
மழை நீர் சேகரிப்பு திட்டம் தொய்வால் நீர்மட்டம் சரிவு...தண்ணீர் தட்டுப்பாடு: ஆண்டிற்கு 1,105 மி.மீ., மழை பொழிவு கிடைத்தும் வீண்
ADDED : மே 03, 2025 11:33 PM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக, 1,105 மி.மீ., மழை பதிவாகும் நிலையில், மழைநீர் சேகரிப்பு திட்டம் முறையாக செயல்படுத்தாததால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம். பருவமழையின் வாயிலாக நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைக்கான தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
ஆனால், சமீப காலமாக பருவமழை குறித்த காலத்தில் சரிவர பெய்யாததால், குறையும் நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் உயருவதில்லை. இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு, 2005ம் ஆண்டு தமிழகம் முழுதும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தியது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி உட்பட ஒன்பது தாலுகாக்களில் உள்ள 80,000 வீடுகள், 10,000க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், ஊரக வளர்ச்சி பொதுப்பணி, வருவாய் உட்பட அரசு அலுவலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதனால், இயற்கையில் கிடைக்கும் மழைநீரை சேமிக்க வழிவகுக்கப்பட்டது. மேலும், ஆறுகளின் குறுக்கே வெள்ள நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்பட்டன. அத்துடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக, தனியார் கட்டடங்கள் மற்றும் வீடுகள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதன் காரணமாக, அரசு அலுவலக கட்டடங்கள், தனியார் வீடுகள், நிறுவனங்களின் கூரையில் இருந்து குழாய்களை அமைத்து, தண்ணீரை நிலத்தடியில் சேகரிக்க உறிஞ்சி குழிகள் அமைத்தனர். இதனால், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.
கிராமங்களில் செயல்படாமல் இருந்த போர்வெல்கள், மழைநீர் சேகரிப்பு காரணமாக மீண்டும் நீர் சுரந்து செயல்பாட்டிற்கு வந்தது. இதையடுத்து, வீடு மற்றும் வணிக வளாகம் கட்ட அனுமதி பெறும்போதே, மழைநீர் சேகரிப்பு கட்டாயப்படுத்தப்பட்டது. மேலும், அரசு அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டது.
ஆனால், அவற்றை முறையாக செயல்படுத்தாமல் வீணாகி வருகிறது. தற்போது கட்டப்படும் வீடுகளில், மழைநீர் சேகரிப்பு அமைப்பை காண்பது அரிதாக உள்ளது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில், கடமைக்கென வைக்கப்பட்டதே தவிர முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
இதனால், அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்தும், தொட்டிகள் சேதமடைந்த நிலையிலும் காணப்படுகின்றன.
இதுகுறித்து திருவாலங்காடைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.செந்தில்குமார் கூறியதாவது:
மாவட்டத்தில், ஆண்டுக்கு சராசரியாக 1,105.8 மி.மீ., மழை பதிவாகிறது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் அதிக மழைப்பொழிவு உள்ளது. இதை சேகரித்தால், மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் நன்கு உயரும்.
ஆனால் வீடு, வணிக வளாகங்களில் உள்ள மழைநீர் தொட்டியில், மழைநீர் வந்தாலும் நிலத்திற்குள் சென்று சேர முடியாத நிலை தான் உள்ளது. பல அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி குப்பை தொட்டி போல் பராமரிக்கப்படுகிறது. மேலும் செடி, மரங்கள் முளைத்துள்ளன.
எனவே, மழைநீரின் அவசியத்தை உணர்ந்து, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டத்தில் தீவிரப்படுத்த கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

