/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு மீனவ கிராமங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறி
/
பழவேற்காடு மீனவ கிராமங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறி
பழவேற்காடு மீனவ கிராமங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறி
பழவேற்காடு மீனவ கிராமங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறி
ADDED : அக் 29, 2025 02:34 AM

பொன்னேரி: பழவேற்காடு மீனவ கிராமங்களின் குடிநீர் தேவைக்கு உதவும் மெதுார் ஏரிக்கு, ஆரணி ஆற்றில் இருந்து, மழைநீர் கொண்டு வருவதற்கான சாத்திய;fகூறுகள் குறித்து. நீர்வளத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என. சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பழவேற்காடு மீனவப்பகுதியில், 35 மீனவ கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது. அங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக, பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் உள்ள ஏரியின் கரையோரங்களில், ஆழ்துளை மோட்டார்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இப்பகுதியில், 24 ஆழ்துளை மோட்டார்கள் மூலம், தினமும் 16.50 லட்சம் லிட்டர் குடிநீர், மீனவ கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மீனவ கிராமங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள மெதுார் ஏரியின் நீர்வரத்து கால்வாய் துார்ந்துள்ளது.
இதனால், மழைக்காலங்களில் ஏரி முழு கொள்ளளவு எட்டுவதில்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆழ்துளை மோட்டார்கள் அவ்வப்போது செயலிழக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன், 85 - 90 அடியில் உவர்ப்பு தன்மை இல்லாத தண்ணீர் கிடைத்தது. தற்போது, 180 - 200 அடி வரை போர்வெல் அமைக்கும் நிலை உள்ளது.
குடிநீர் வாரியத்தினர், மாற்று இடங்களில் புதிது புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் பயனற்று போகிறது. மீனவ கிராமங்களில் குடிநீர் வினியோகமும் சீராக இல்லாமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
ஏரியில் மழைநீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாத சூழலில், 35 மீனவ கிராமங்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது.
எதிர்கால திட்டமிடல் ஏதுமின்றி, நீர்வளத்துறையினர் அலட்சியம் காட்டுவதால், நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதுடன், மீனவ கிராமங்களின் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் நிலையே உள்ளது.
மேற்கண்ட மெதுார் ஏரிக்கு, காட்டாவூர், பெரியகாவணம் பகுதிகளில் இருந்து வரத்துகால்வாய் அமைந்துள்ளது. பெரியகாவணம் பகுதியை ஒட்டி ஆரணி ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், 13 - 16 டி.எம்.சி., மழைநீர் கடலில் சென்று வீணாகிறது.
தற்போதும், ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, விநாடிக்கு, 1,800 கனஅடி நீர் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.
பெரியகாவணத்தில் இருந்து, மெதுார் ஏரிக்கு வரும் கால்வாயை அகலப்படுத்தி, ஆரணி ஆற்றில் இருந்து மழைநீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

