/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரத்த தான முகாமுக்கு அனுமதி மறுப்பு நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
/
ரத்த தான முகாமுக்கு அனுமதி மறுப்பு நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
ரத்த தான முகாமுக்கு அனுமதி மறுப்பு நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
ரத்த தான முகாமுக்கு அனுமதி மறுப்பு நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
ADDED : நவ 24, 2025 04:15 AM

திருவாலங்காடு: நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ரத்த தான முகாமுக்கு திடீரென அனுமதி மறுத்ததால், அக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு, 14ம் ஆண்டு ரத்ததான முகாம் நேற்று நடந்தது. அக்கட்சியின் திருவாலங்காடு ஒன்றிய செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
நேற்று காலை 9:00 - மதியம் 1:00 மணி வரை முகாம் நடத்த, திருவாலங்காடு காவல் நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரிடம் அனுமதி கோரி, கடந்த 15ம் தேதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள் கடிதம் அளித்திருந்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, நேற்று காலை 9:00 மணிக்கு வந்த திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையிலான போலீசார், 'முகாம் நடத்த அனுமதி இல்லை' எனக் கூறினர். இதனால், கட்சி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, முகாம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் விரக்தியடைந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், காலை 10:30 மணியளவில் திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், 20 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை அலுவலர் முகாம் நடத்த அனுமதிப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, 10:50 மணிக்கு அவர்கள் கலைந்து சென்றனர். பின், 12:00 மணிக்கு துவங்கி 1:00 மணி வரை ரத்த தான முகாம் நடந்தது. இதில், 20 பேர் மட்டுமே ரத்ததானம் வழங்கினர்.
இதனால், திருவாலங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ரத்ததானம் வழங்க வந்த மக்கள் மற்றும் கட்சியினர், 250க்கும் மேற்பட்டோர் திரும்பி சென்றனர்.

