/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் வழங்குவது எப்போது?
/
சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் வழங்குவது எப்போது?
ADDED : ஆக 13, 2025 02:41 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஸ் நிலைய வளாகத்தில், சாலையோர வியாபாரிகளுக்காக நிறுவப்பட்ட கடைகளை, ஏழு மாதங்களாக ஒப்படைக்காமல் உள்ளது.
இதனால், ஜி.என்.டி., சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் பரபரப்பான நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சாலையோர வியாபாரிகளுக்காக, பஸ் நிலைய வளாகத்தில், 197 கடைகள் நிறுவபட்டன.
பணிகள் முடிந்து ஏழு மாதங்கள் ஆன நிலையில் இதுவரை, சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் ஒப்படைக்கப்படவில்லை.
போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணபதற்காக நிறுவப்பட்ட கடைகளை ஒப்படைப்பதில் பேரூராட்சி நிர்வாகம் தாமதித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும் தாமதிக்காமல், உடனடியாக சாலையோர வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க, பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'மின் விளக்கு வசதி அமைக்கும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது. முடிந்ததும், சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்படும்' என்றார்.