/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எப்போது?
/
சாலையோரம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எப்போது?
ADDED : மார் 17, 2025 01:27 AM

ஆர்.கே.பேட்டை:திருத்தணி நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகாக்களில், சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. சாலையை ஒட்டி பாதசாரிகள் நடந்து செல்வதற்கான பாதை முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பாதசாரிகள், சாலையிலேயே நடக்க வேண்டிய அபாய நிலை உள்ளது.
குறிப்பாக, பஜார் பகுதி மற்றும் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலை துறை சார்பில், சாலையோரங்களில் கட்டப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களும், இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிரமிப்பில் சிக்கி மறைந்துள்ளன.
ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில், சமீபத்தில் பேருந்து விபத்து நடந்த கே.ஜி.கண்டிகையில், சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருபுறம் சாலை விரிவாக்க பணியும், மறுபுறம் ஆக்கிரமிப்பு கடையும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையோர கடைகளை தனியாருக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக நடத்த அறிவுறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.