/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பயோமைனிங்' முறையில் கழிவுகளை அகற்றும் பணிகள் எப்போது முடியும்? இரண்டு ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்கும் திட்டம்
/
'பயோமைனிங்' முறையில் கழிவுகளை அகற்றும் பணிகள் எப்போது முடியும்? இரண்டு ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்கும் திட்டம்
'பயோமைனிங்' முறையில் கழிவுகளை அகற்றும் பணிகள் எப்போது முடியும்? இரண்டு ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்கும் திட்டம்
'பயோமைனிங்' முறையில் கழிவுகளை அகற்றும் பணிகள் எப்போது முடியும்? இரண்டு ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்கும் திட்டம்
ADDED : ஜூன் 25, 2025 03:09 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில், நீண்டகாலமாக தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றுவதற்கு செயல்படுத்தப்பட்ட, 'பயோமைனிங்' திட்டத்திற்கான பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் ஜவ்வாக இழுத்து வருகிறது. இதனால், ஆரணி ஆற்றின் மண் வளத்தை மீட்பது கேள்விக்குறியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகநராட்சிக்கு உட்பட்ட செங்குன்றம் சாலை அருகே உள்ள ஆரணி ஆற்றின் உள்பகுதியில், 5 ஏக்கர் பரப்பளவில் பல ஆண்டுகளாக மலைபோல் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
இவற்றால், ஆற்றின் மண் வளம் பாதித்து வருவது குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து, ஆற்றின் மண்வளத்தை மீட்டெடுக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அப்பகுதியில், 26,435 கன அடி அளவிற்கு குப்பை குவிந்திருப்பது தெரிந்தது.
அவற்றை, 'துாய்மை இந்திய - 2.0' திட்டத்தின் கீழ் 'பயோமைனிங்' முறையில் அகற்றுவதற்காக, 1.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 2023ல் பணிகள் துவங்கின.
தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வாயிலாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, பிரத்யோக ரோலர்கள், கன்வேயர், சல்லடைகள் உதவியுடன் மண், கல், பிளாஸ்டிக் என, தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டன.
அவை, மறுசுழற்சிக்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டன. இந்நிலையில், இத்திட்டம் துவங்கி இரண்டு ஆண்டுகளான நிலையில், இதுவரை 30 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே பணிகள் நடைபெற்று உள்ளன.
மீதமுள்ள பணிகள் மந்தகதியில் நடைபெறுகிறது. இதனால், ஆரணி ஆற்றை குப்பை கழிவுகளில் இருந்து மீட்டெடுக்கும் பணிகள் ஜவ்வாக இழுத்து வருகிறது.
பணிகள் எப்போது முடியும், ஆற்றின் மண்வளம் எப்போது மீட்கப்படும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தியுடன் கேட்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
'பயோமைனிங்' திட்டத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில்லை. கண்துடைப்பிற்காக அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்துவதில்லை.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் அதே பகுதியில், தற்போதும் நகராட்சியின் குப்பை, தரம் பிரிக்கப்படாமல் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டப்படுவதும் தொடர்கிறது.
இதனால், ஆரணி ஆற்றின் மண்வளத்தை மீட்பது கேள்விக்குறியாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, திட்டத்தை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, ஆரணி ஆற்றில் தொடர்ந்து குப்பை கொட்டுவதை தவிர்த்து, அனைத்தையும் தரம்பிரித்து கையாள கூடுதல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அவ்வப்போது மழைப்பொழிவு இருப்பதால், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது, கூடுதல் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. துரிதமாக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். ஆரணி ஆற்றில் புதிய கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சி அதிகாரி,
பொன்னேரி.