/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவாபுரியில் சிக்கி தவிக்கும் பக்தர்கள் வாகன நெரிசலுக்கு தீர்வு எப்போது?
/
சிறுவாபுரியில் சிக்கி தவிக்கும் பக்தர்கள் வாகன நெரிசலுக்கு தீர்வு எப்போது?
சிறுவாபுரியில் சிக்கி தவிக்கும் பக்தர்கள் வாகன நெரிசலுக்கு தீர்வு எப்போது?
சிறுவாபுரியில் சிக்கி தவிக்கும் பக்தர்கள் வாகன நெரிசலுக்கு தீர்வு எப்போது?
ADDED : செப் 21, 2024 02:21 AM

கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரியில், தரிசனம் செய்யும் நேரத்தைவிட கோவிலுக்கு வெளியே ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட அதிக நேரம் ஆகிறது என பக்தர்கள் புலம்பி வருகின்றனர். அதற்கு தீர்வு காண கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விேஷச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர்.
அங்கு வரும் பக்தர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது போக்குவரத்து நெரிசல் மட்டுமே. குறுகிய சாலையை ஆக்கிரமித்திருக்கும் பூக்கடைகள், அதை ஒட்டி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், பார்க்கிங் வளாகம் நிரம்பியதும் சாலையோரத்தில் நிறுத்தப்படும் கார்கள் போன்று அடுக்கடுக்கான சாலையோர ஆக்கிரமிப்புகளால், சிறுவாபுரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.
மற்றொரு புறம் கோபுர நுழைவாயிலை ஆக்கிரமித்து வைக்கப்படும் காய்கறி கடைகளால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே கோவிலுக்கு சென்று வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, கடந்த ஜூன் மாதம், 25ம் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கலெக்டர் கூறுகையில், ‛போக்குவரத்து சரி செய்வது, கடைகளை ஒழுங்குப்படுத்தி சாலையை விரிவாக்கம் செய்வது, வாகனங்கள் நிறுத்த கோவில் அருகே போதிய பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது, பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்துவது, பக்தர்கள் ஓய்வு மற்றும் தங்கும் இடம், குடிநீர் வசதி, போதிய கழிவறைகள் ஏற்படுத்துவது குறித்து கள ஆய்வு செய்தோம். அனைத்து வசதிகளையும் மேம்படுத்த, தேவைப்பட்டால் தனியார் நிலங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்திருந்தார்.
சிறுவாபுரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் தெரிவித்தபடி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.