/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தலக்காஞ்சேரியில் குவிந்துள்ள குப்பைக்கு தீர்வு எப்போது?:தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
/
தலக்காஞ்சேரியில் குவிந்துள்ள குப்பைக்கு தீர்வு எப்போது?:தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
தலக்காஞ்சேரியில் குவிந்துள்ள குப்பைக்கு தீர்வு எப்போது?:தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
தலக்காஞ்சேரியில் குவிந்துள்ள குப்பைக்கு தீர்வு எப்போது?:தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
ADDED : பிப் 16, 2024 10:02 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி, தலக்காஞ்சேரியில் குவிந்துள்ள, குப்பை கிடங்களில், அவ்வப்போது தீ வைத்து எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை தொடர்கதையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், குப்பையினை 'பயோமைனிங்' முறையில் அழிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 65,000 பேர் வசித்து வருகின்றனர்.
தினமும், மக்கும், மக்காத குப்பை என, 40 டன் குப்பை சேருகிறது. இந்த குப்பை அனைத்தும், ஈக்காடு அருகே உள்ள தலக்காஞ்சேரியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. நகரில் அதிகரித்து வரும் குப்பையை, கொட்ட இங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. குப்பையை கொட்ட அப்பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பையை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாக்கும் வகையில், கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில், கடந்த 10 ஆண்டுக்கு முன், 4.7 ஏக்கர் நிலத்தில், 5.98 கோடி ரூபாயில், குப்பையினை உரமாக மாற்றும் திட்டம் துவங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதிப்பு
நகராட்சியில் சேகரமாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பையை இங்கு கொண்டு வரப்பட்டு, அதை உரமாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும், நகராட்சிக்கு உட்பட்ட 16 இடங்களில் உரக்குடில் அமைத்து, அங்கும் தெருவில் சேகரமாகும் குப்பையை உரமாக மாற்றப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தலக்காஞ்சேரியில், பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்த குப்பை, மலை போல் தேங்கி உள்ளன. இந்த குப்பையை 'பயோமைனிங் முறையில் பிரித்து, 3 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த, 2019ல் செயல்படுத்தப்பட்டது. இதில், பாதிக்கும் மேற்பட்ட குப்பை, 'பயோமைனிங்' செய்யப்பட்ட நிலையில், கொரோனா காலத்திற்கு பின், செயல்படுத்தப்படவில்லை.
துப்புரவு ஊழியர்கள், மக்கும், மக்காத குப்பை பிரிக்கப்பட்ட பின், மீதம் உள்ள குப்பையை மட்டும், தலக்காஞ்சேரியில் கொட்டி வருகின்றனர். மேலும், கடந்த, ஆறு மாதமாக, நகராட்சியில் வீடுதோறும் சேகரமாகும் குப்பை அகற்றும் பணி, தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது.
அவர்களும், வீடுகளில் சேகரமாகும் குப்பையை தலக்காஞ்சேரியில் கொட்டி வருகின்றனர். இதனால், மீண்டும் அங்கு, குப்பை மலைபோல் குவிந்துவிட்டது. இதையடுத்து, சிலர் இந்த குப்பையை தீ வைத்து எரிப்பதால், புகை எழுந்து, அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அந்த வழியாக, தலக்காஞ்சேரிக்கு செல்லும் கிராமவாசிகள், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் பள்ளி குழந்தைகள், குப்பை எரிப்பதால், சுவாசக்கோளாறுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து நகர் மன்ற கூட்டத்தில், புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் த.வி.சுபாஷிணி கூறியதாவது:
திருவள்ளூர் நகரை, குப்பையில்லா நகராக அறிவிக்கப்பட்டு, திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தலக்காஞ்சேரி குப்பை கிடங்கில் உள்ள, பல்லாயிரக்கணக்கான கிலோ குப்பையை, 'பயோமைனிங்' செய்ய, அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்து, செயல்படுத்தப்பட உள்ளது. தலக்காஞ்சேரியில் குப்பை கொட்டாத அளவிற்கு பூட்டி, வைக்கவும் திட்டமிட்டு உள்ளோம்.
அரசிடம் இருந்து உத்தரவு பெறப்பட்டதும், அதற்கான நிதி பெறப்பட்டு, நவீன தொழில்நுட்ப உதவியுடன், 'பயோமைனிங் முறையில் குப்பை அழிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.