/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் வேளாண் நிலங்களில் காட்டுப்பன்றிகள்...அட்டகாசம்:பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிப்பு
/
திருவள்ளூர் வேளாண் நிலங்களில் காட்டுப்பன்றிகள்...அட்டகாசம்:பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிப்பு
திருவள்ளூர் வேளாண் நிலங்களில் காட்டுப்பன்றிகள்...அட்டகாசம்:பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிப்பு
திருவள்ளூர் வேளாண் நிலங்களில் காட்டுப்பன்றிகள்...அட்டகாசம்:பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிப்பு
UPDATED : மே 08, 2025 02:51 AM
ADDED : மே 08, 2025 02:38 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் வனப்பகுதி மற்றும் காட்டுப் பகுதி அருகில் விவசாய நிலங்களில் விளைவித்த பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து, நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டும், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் பெருத்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 47 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்டத்தில், 2.80 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது.
மாவட்டத்தில், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை வட்டங்களில், நெடியம், புச்சிரெட்டிபள்ளி, கொத்துார், திருத்தணி பச்சரிசி மலை, புண்ணாக்கு மலை, கன்னிகாபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மலைகள் அமைந்துள்ளன.
அந்த வட்டங்களில் மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. வனத்துறையினர், மலை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில், அடர்ந்த மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வனப்பகுதிகளில் இருந்து வரும் காட்டுப் பன்றிகள், விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை நிலங்களில் புகுந்து, சேதப்படுத்தி வருகின்றன.
அதே போல், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி வட்டாரத்திற்கு உட்பட்ட, ஆரணி மங்களம், புதுப்பாளையம், காரணி, எருக்குவாய், நெல்வாய், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் ஏராளமான காட்டுப் பகுதிகள் உள்ளன.
அந்த காட்டுப் பகுதியில் இருந்தும், காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து, ஆரணி அடுத்த மங்களம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.முனிவேல், 38, கூறியதாவது:
ஆரணி ஆற்றுக்கு அருகில் பெருமாள்பேட்டை கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் காய்கறி, நெல், வேர்க்கடலை பயிரிட்டு வருகிறேன். இரவு நேரத்தில், அருகில் உள்ள காட்டுப் பகுதிகளில் இருந்து காட்டுப்பன்றிகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து, நெல் மற்றும் இதர பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால், கஷ்டப்பட்டு விவசாயம் செய்தும், காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விளைச்சல் இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம்.
நஷ்டம்
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் புகார் அளித்தும், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், நஷ்டம் தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சேர்பேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.சுரேஷ், 40, கூறியதாவது:
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், நெல் பயிரிட்ட பின், இதர காலகட்டத்தில் காய்கறி, மக்காச்சோளம், தர்ப்பூசணி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களை விளைவித்து வருகிறோம்.
ஆனால், காட்டுப்பன்றிகள் அதிகளவில் வந்து, நாங்கள் விளைவித்த பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க வேண்டும் என வனத்துறையிடம் முறையிட்டும், அவர்கள் அலட்சியமாக உள்ளனர்.
விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லையில் இருந்து விடுபட, மின்சார வேலி அமைக்கவும், வனத்துறை முட்டுக்கட்டையாக உள்ளது. இதனால், விவசாயிகளாகிய நாங்கள், விளைச்சல் இல்லாமல், ஆண்டு தோறும் நஷ்டத்தை அனுபவித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கோட்ட அளவில், திருவள்ளூர், பொன்னேரி மற்றும் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாதந் தோறும் நடைபெறும் கூட்டத்திலும் இதுகுறித்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு கிடைக்காமல், விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
நடவடிக்கை
திருவள்ளூர் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி பகுதிகளில் மலைப்பகுதிகள் அதிகம் உள்ளன. இதேபோல், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை பகுதிகளில், விவசாய நிலங்களை சுற்றி ஏராளமான காடுகள் உள்ளன.
அந்த காடுகளில் இருந்து காட்டு பன்றிகள் அதிகளவில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த எங்களது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் அளிக்கும் அறிவுரைப்படி காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் சிறப்பு திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி, வனப்பகுதியில் இருந்து 3 கி.மீட்டருக்குள் காட்டுப்பன்றி இருந்தால், வனத்துறை பிடித்து மீண்டும் காட்டுக்குள் பத்திரமாக விடப்படும்.
வனப்பகுதியில் இருந்து 3 கி.மீட்டர் துாரத்திற்கு மேல் வரும் காட்டுப்பன்றிகள் சுட்டுக் கொல்லப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பு செய்து பல மாதங்களாகியும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
இதுகுறித்து, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் முறையிட்டும், வனத்துறை உரிய பதில் கூறாமல் தட்டிக் கழித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி பகுதிகளில் மலைப்பகுதிகள் அதிகம் உள்ளன. இதேபோல், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை பகுதிகளில், விவசாய நிலங்களை சுற்றி ஏராளமான காடுகள் உள்ளன.
அந்த காடுகளில் இருந்து காட்டு பன்றிகள் அதிகளவில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த எங்களது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.
அவர்கள் அளிக்கும் அறிவுரைப்படி காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.