/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றுலாவை மேம்படுத்த பழவேற்காடில் படகு குழாம்...அமையுமா?:மீனவர்கள் தொழில் பாதிப்பின்றி உருவாக்க எதிர்பார்ப்பு
/
சுற்றுலாவை மேம்படுத்த பழவேற்காடில் படகு குழாம்...அமையுமா?:மீனவர்கள் தொழில் பாதிப்பின்றி உருவாக்க எதிர்பார்ப்பு
சுற்றுலாவை மேம்படுத்த பழவேற்காடில் படகு குழாம்...அமையுமா?:மீனவர்கள் தொழில் பாதிப்பின்றி உருவாக்க எதிர்பார்ப்பு
சுற்றுலாவை மேம்படுத்த பழவேற்காடில் படகு குழாம்...அமையுமா?:மீனவர்கள் தொழில் பாதிப்பின்றி உருவாக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 17, 2025 09:07 PM

பழவேற்காடு: பழவேற்காடு ஏரியில் சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்வதற்கான படகு குழாம் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு, ஓராண்டிற்கு முன் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கான முன்னெடுப்புகள் ஏதும் இல்லாததால், சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். மீனவர்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ பகுதி அழகிய கடற்கரை, டச்சு கல்லறைகள், நிழல் கடிகாரம், கலங்கரை விளக்கம் உள்ளிட்டவைகளுடன், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகிறது.
விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், இங்கு ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். குறிப்பாக புத்தாண்டு, காணும் பொங்கல் நாட்களில், 50,000க்கும் மேற்பட்டோர் வந்து பொழுதை கழிக்கின்றனர்.
இங்குள்ள பழவேற்காடு ஏரியானது, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக, ஆந்திர மாநிலம் வரை பரவி இருக்கிறது. பழவேற்காடு ஏரியானது, பல்வேறு வகையான பறவைகளை கொண்ட சரணாலய பகுதியாகவும் உள்ளது.
இங்கு வர்ணநாரை, பூநாரை, கடல்பொந்தா, கூழைக்கடா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பறவைகள், ஆண்டுதோறும் வந்து செல்கின்றன. இவை பெரும்பாலும், ஏரியில் உள்ள தீவுப் பகுதிகளை ஒட்டியே கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
இவற்றை சுற்றுலா பயணியர் படகுகளில் சென்று தான் பார்வையிட முடியும். கடந்த 2011ம் ஆண்டிற்கு முன் வரை, படகுகளில் சுற்றுலா பயணியர் ஏரியில் பயணித்து, இவற்றை கண்டு ரசித்து வந்தனர். ஏரியிலும் ஜாலியாக வலம் வந்தனர்.
கடந்த 2011ல், பழவேற்காடு ஏரியில் சவாரி சென்றபோது, படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், தடையை மீறி படகுகளில் சுற்றுலா பயணியரை அழைத்து செல்வதும், அதனால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கிறது. படகு சவாரி தடைக்கு பின், 20க்கும் மேற்பட்டோர் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மாவட்ட நிர்வாகம் கிடுக்கிப்பிடு போட்டு கண்காணித்தும், படகு சவாரியை கட்டுப்படுத்த முடியவில்லை. இவற்றை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம், அரசு சார்பில் படகு சவாரியை நடத்த திட்டமிட்டது.
இதற்காக, கடந்தாண்டு ஜூன் மாதம், கலெக்டர் தலைமையில் சுற்றுலா, மீன்வளம், வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், பழவேற்காடு ஏரியை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்விற்கு பின், சுற்றுலாத் துறை வாயிலாக, பழவேற்காடு ஏரியில் படகு குழாம் அமைத்து, படகு சவாரி செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதனால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகை தருவர் எனவும், மீனவ மக்களின் வாழ்வாதாரம் உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்திற்காக ஆய்வு செய்து ஓராண்டான நிலையில், தற்போது வரை எவ்வித பணிகளும் நடைபெறவில்லை.
கடந்த மாதம், பொன்னேரிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், பழவேற்காடு ஏரி பகுதியில் சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதற்கான நடவடிக்கைகளில் சுற்றுலாத்துறை ஈடுபட்டுள்ள நிலையில், படகு குழாம் அமைக்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என, சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
அதேசமயம், மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள ஏரியில், அவர்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.