/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலை ரசாயன கழிவால் மக்கள் பாதிப்பு மணலியில் பல்நோக்கு மருத்துவமனை வருமா?
/
தொழிற்சாலை ரசாயன கழிவால் மக்கள் பாதிப்பு மணலியில் பல்நோக்கு மருத்துவமனை வருமா?
தொழிற்சாலை ரசாயன கழிவால் மக்கள் பாதிப்பு மணலியில் பல்நோக்கு மருத்துவமனை வருமா?
தொழிற்சாலை ரசாயன கழிவால் மக்கள் பாதிப்பு மணலியில் பல்நோக்கு மருத்துவமனை வருமா?
ADDED : அக் 27, 2025 12:49 AM
மணலி: ரசாயன தொழிற்சாலைகள் நிறைந்த மணலி பகுதியில், பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள், அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
மணலி மண்டலத்தில், எண்ணெய் சுத்திகரிப்பு, கிரீஸ், ஆக்சிஜன், உரம் தயாரிப்பு உட்பட நுாற்றுக்கணக்கான ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன.
இவற்றில் இருந்து வெளியேறும் மாசு காரணமாக, மணலியில் வசிக்கும் 1.50 லட்சம் பேர் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, அதிகாலை நேரத்தில் காற்றில் கலக்கும் நச்சுக்காற்றால், பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, நிறுவனங்களின் ஆயில் கழிவுகளும் அதில் சேர்ந்து, குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகளை சூழ்கிறது. இதன் காரணமாக, மணலி முழுதும் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளது. அந்த தண்ணீரை பயன்படுத்தும் பலருக்கும், தோல் நோய் ஏற்பட்டு வருகிறது.
நுாற்றுக்கணக்கான ரசாயன தொழிற்சாலைகள் செயல்படும் மணலியில், 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எனும் பல்நோக்கு மருத்துவமனை இல்லாதது, அப்பகுதியில் வசிப்போரை வஞ்சிப்பதாகவே உள்ளது.
தொழிற்சாலைகள், சி.எஸ்.ஆர்., எனும் சமூக பொறுப்பு நிதியின் கீழ், சிறிய அளவிலான மருத்துவ முகாம்களை மட்டுமே நடத்தி கணக்கு காட்டுகின்றன. அதற்கு பதில், கோடிக்கணக்கில் செலவிடப்படும் சி.எஸ்.ஆர்., நிதியை மாநகராட்சி பெற்று, மணலியில் பல்நோக்கு மருத்துவமனை கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து மணலியைச் சேர்ந்த சமூகஆர்வலர் எஸ்.ஆனந்த், 45, கூறியதாவது:
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மாசால், மணலி மக்கள் தினமும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நிலம், நீர், காற்று உள்ளிட்டவற்றில் கலக்கும் ரசாயனத்தால், பலருக்கும் தோல் நோய் ஏற்பட்டு வருகிறது. தவிர, புற்றுநோய் பாதிப்பிற்கும் ஆளாகின்றனர்.
எனவே, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில், பல்நோக்கு மருத்துவமனையை மணலியில் கட்ட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

