/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் கழிவுநீர் லாரிகள் அத்துமீறல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?
/
கும்மிடியில் கழிவுநீர் லாரிகள் அத்துமீறல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?
கும்மிடியில் கழிவுநீர் லாரிகள் அத்துமீறல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?
கும்மிடியில் கழிவுநீர் லாரிகள் அத்துமீறல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 30, 2025 12:16 AM
கும்மிடிப்பூண்டி, டேங்கர் லாரிகளில் ஏற்றி வரப்படும் கழிவுநீரை, மழைநீர் வடிகால்வாயில் திறந்து விடுவதால், நீர்நிலை மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியில், 20க்கும் மேற்பட்ட கழிவுநீர் சேகரிக்கும் டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளன. இதன் வாயிலாக, தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை, திருமழிசையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், அதற்கான நேரம், துாரம், செலவுகளை எண்ணி, கும்மிடிப்பூண்டி பகுதியில், சென்னை - - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் திறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அந்த மழைநீர் கால்வாயில் திறந்து விடப்படும் கழிவுநீர் நேராக, கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் கலக்கிறது. இதனால், மூன்று ஆண்டுகளாக தாமரை ஏரி மாசடைந்து, கழிவுநீர் மட்டுமே தேங்கியுள்ளது.
மீன்கள் செத்து மிதப்பதும், மழைக்காலங்களில் நிரம்பி வழியும் தாமரை ஏரியின் கழிவுநீர், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் ஆறாக ஓடுவதும் ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. மேலும், அடுத்தடுத்து உள்ள நீர்நிலைகளும் மாசடைந்து வருகின்றன.
அத்துமீறும் டேங்கர் லாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தால், வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வதுடன், கும்மிடிப்பூண்டியில் சுத்திகரிப்பு நிலையம் துவக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதை, அதன் உரிமையாளர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனால், அத்துமீறல்களை தடுக்க முடியாமல் அரசு துறையினரும் திணறி வருகின்றனர். எனவே, கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவரை, பாதுகாப்பாக கழிவுநீரை அப்புறப்படுத்த, டேங்கர் லாரி உரிமையாளர்களை அழைத்து, அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பகுதிமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.