/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க புதிய திட்டங்கள்..அறிவிக்கப்படுமா?
/
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க புதிய திட்டங்கள்..அறிவிக்கப்படுமா?
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க புதிய திட்டங்கள்..அறிவிக்கப்படுமா?
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க புதிய திட்டங்கள்..அறிவிக்கப்படுமா?
ADDED : ஏப் 15, 2025 01:31 AM
பொன்னேரி, பொன்னேரி தொகுதியில், 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வரும் தமிழக முதல்வர், எதிர்கால குடிநீர் தேவையை கருதி, புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கவும், ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வராத குடிநீர் திட்டங்களுக்கு புத்துயிர் அளிப்பதற்குமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என, கிராம வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர், பழவேற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள், வங்காள விரிகுடா கடல் பகுதியையும், கழிமுக பகுதிகளையும் ஒட்டி அமைந்துள்ளன.
இங்கு, ஆழ்துளை மோட்டார்கள் வாயிலாக கிடைக்கும் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது. இதனால் இக்கிராமங்களுக்கு, வெளியிடங்களில் இருந்தே குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது.
அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், திருவெள்ளவாயல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, 10 -12 கி.மீ., தொலைவில் உள்ள பொன்னேரி அடுத்த சிறுவாக்கம் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது.
அத்திப்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, 48 கிராமங்கள், அனுப்பம்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, 55 கிராமங்கள் என, மொத்தம் 103 கிராமங்களுக்கு, தினமும் 22.50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, 5 - 8 கி.மீ., தொலைவில் உள்ள சீமாவரம் மற்றும் வன்னிப்பாக்கம் பகுதிகளில், கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
அதேபோல், பழவேற்காடு மீனவ பகுதியில் உள்ள கோட்டைகுப்பம், தாங்கல் பெரும்புலம் உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 33 கிராமங்களுக்கு, 12 கி.மீ., தொலைவில் உள்ள மெதுார் ஏரியின் கரையோரங்களில் ஆழ்துளை மோட்டார் அமைத்து, தினமும் 16.50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மீஞ்சூர், பழவேற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள 200 கிராமப்புற பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக வழங்கப்பபடும் குடிநீர் போதுமானதாக இல்லை.
கிராமங்களின் குடிநீர் தேவை, 50 சதவீதத்திற்கும் குறைவாக பூர்த்தியாகிறது. குடிநீர் தேவை அதிகமாகவும், வினியோகம் குறைவாகவும் உள்ளது. கோடைக்காலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
பொன்னேரி தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கடந்தாண்டு 'மீஞ்சூர் பகுதிக்கு காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து, தினமும் 40 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கவும், தேர்வாய்கண்டிகை நீர்தேக்கத்தில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது.
திட்டம் அறிவிக்கப்பட்டு ஓராண்டான நிலையில், அதற்கான பூர்வாங்க பணிகள் ஏதும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மீஞ்சூர் அடுத்த வாயலுார் கிராமத்தில் உள்ள பெரியதாமரை, சின்னதாமரை, மாமணிக்கால் ஆகிய மூன்று ஏரிகளையும் இணைத்து, 414 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கம் உருவாக்க திட்டமிடப்பட்டது.
இது தொடர்பாக, 2021 ஜூன் மாதம் தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழகம் மேற்கொண்ட ஆய்வும் பயனற்று இருக்கிறது.
பழவேற்காடு மீனவ கிராமங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள மெதுார் ஏரியை ஆழப்படுத்தி, அதற்கான வரத்து கால்வாய்களை சீரமைத்து, ஆரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைககளும் இல்லை.
பொன்னேரி அடுத்த காட்டூர் - தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து, 62 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கத்திலும், முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கி வைப்பதில்லை.
பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட, 200க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்வதற்காக, புதிய நீர்த்தேக்க திட்டங்களோ, ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு பணிகளே நடைபெறாத நிலையில் கிராமவாசிகள் அதிருப்தில் உள்ளனர்.
வரும் 18ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வரும் தமிழக முதல்வர், பொன்னேரி தொகுதிக்கு புதிய குடிநீர் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
கடலில் கலக்கும் மழைநீரை
சேமிப்பது அவசியம்
பொன்னேரி தொகுதியில் உள்ள கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகள் வழியாக, ஒவ்வொரு ஆண்டும், 30 டி.எம்.சி.,க்கும் அதிகமான மழைநீர் வங்காள விரிகுடா கடலில் சென்று கலக்கிறது. இதில், 10 சதவீதம் தண்ணீரை சேமித்து வைத்தாலே, பொன்னேரி தொகுதி மக்களின் குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்யலாம். மெதுார், வஞ்சிவாக்கம், வாயலுார் என, பல்வேறு கிராமங்களில் அதற்கான நீர்நிலைகளும் அதிகளவில் உள்ளன. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
- டி.நித்தியானந்தம்,
பழவேற்காடு.