/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மக்களின் 30 ஆண்டு எதிர்பார்ப்பு... நிறைவேறுமா?
/
திருவள்ளூர் மக்களின் 30 ஆண்டு எதிர்பார்ப்பு... நிறைவேறுமா?
திருவள்ளூர் மக்களின் 30 ஆண்டு எதிர்பார்ப்பு... நிறைவேறுமா?
திருவள்ளூர் மக்களின் 30 ஆண்டு எதிர்பார்ப்பு... நிறைவேறுமா?
ADDED : ஜூலை 09, 2024 06:34 AM

திருவள்ளூர்: திருவள்ளூரில், நீண்ட துார விரைவு ரயில்கள் நின்று செல்ல 30 ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தியும், தெற்கு ரயில்வே செவிசாய்க்கவில்லை . இதனால், எதிர்பார்ப்பில் இருந்த ரயில் பயணியர், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, திருவள்ளூர் வழியாக, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட வட, தென் மாவட்டங்களுக்கும், விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, புறநகர் மின்சார ரயில்களில், தினமும் ஒரு லட்சம் பயணியர்; 10,000த்திற்கும் மேற்பட்டோர், வியாபாரம் சம்பந்தமாக, டில்லி, மும்பை, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் பயணிக்கின்றனர்.
கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், கணிசமானோர் பயணம் செய்கின்றனர். இவர்கள், வெளியூர் செல்ல, சென்னை சென்ட்ரல் அல்லது அரக்கோணத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
குடும்பத்துடன் பயணிப்போர், மூட்டை, முடிச்சுகளுடன், முதியோர், குழந்தைகளை அழைத்துச் செல்ல சிரமப்படுகின்றனர்.
மேலும், ரயில் புறப்படுவதற்கு முன்னதாக, இரண்டு மணி நேரத்திற்கு முன் செல்ல வேண்டி உள்ளது.
இதன் காரணமாக, கால விரயம், வீண் செலவு மற்றும் வீண் அலைச்சல் ஏற்படுகிறது; எனவே, சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக இயக்கப்படும், கோவை, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும், எக்ஸ்பிரஸ் ரயில்கள், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ரயில்வே துறையினரை வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை தெற்கு ரயில்வே அலுவலகத்தில், ரயில் பயணியர் சங்கத்தினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த ஆலோனை கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் மற்றும் ரயில் பயணியர் உபயோகிப்பாளர் குழு உறுப்பினரான, ஜெயபால்ராஜ், திருவள்ளூரில், ஒன்பது எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தக் கோரி, மனு அளித்தார்.
இந்நிலையில், அம்மனுவையும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆரம்ப நிலையிலேயே நிராகரித்து விட்டனர். மேலும், 'திருவள்ளூர் ரயில் நிலையத்தில், தற்போது, ஏராளமான புறநகர் மின்சார ரயில் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்கின்றன.
இதற்கு மேல், அங்கு, எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல, ரயில்வே போர்டு விதிகள் அனுமதிக்கவில்லை, என காரணம் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே அதிகாரிகளின் நிராகரிப்பால், கடந்த, 30 ஆண்டுக்கும் மேலாக போராடி வரும், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ரயில் பயணியர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் ரயில் பயணியர் சங்க நிர்வாகி பாஸ்கர் கூறியதாவது:
கேரள மாநிலத்தில், வருவாய் குறைந்த ரயில் நிலையங்களில் கூட, விரைவு ரயில்கள் நிறுத்தப்படுகின்றன.
அண்டை மாநிலங்களான, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளா மாநில எம்.பி.,க்கள் கட்சி பாகுபாடின்றி, ஒற்றுமையாக செயல்பட்டு தங்கள் மாநிலங்களுக்கு ரயில் வசதியினை மேம்படுத்திக் கொள்கின்றனர்.
அதே போன்று, தமிழக எம்.பி.,க்களும், ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிருப்தி
திருவள்ளூர் மாவட்டத் தலைநகர் என்று தான் பெயரே தவிர, அதற்கான வசதி எதுவும், ரயில் நிலையத்தில் கிடையாது. கோவை, சேலம் மார்க்கத்தில், சிறிய கிராமத்தில் கூட விரைவு ரயில் நிறுத்தப்படும் நிலையில், திருவள்ளூரை ரயில்வே துறையினர் புறக்கணிப்பது வேதனையாக உள்ளது. எனவே, திருவள்ளூர் கலெக்டரிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால், மக்கள் கோரிக்கைதான் நிறைவேறவில்லை.
- எஸ்.அரவிந்த்
ரயில் பயணியர், திருவள்ளூர்.
பயனில்லை
சென்னையில் இருந்து தெற்கு மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் அனைத்தும், செங்கல்பட்டில் நின்று செல்கின்றன. அதே துாரத்தில் தான், திருவள்ளூரும் அமைந்துள்ளது. அங்கு மட்டும், அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்கையில், திருவள்ளூரில், நிறுத்தாமல் செல்வது ஏன் என, தெரியவில்லை. எனவே, கையெழுத்து இயக்கம் ஆரம்பித்து, ரயில்வே துறைக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை.
-ஒய்.ஜெயபால்ராஜ்
செயலர், திருவள்ளூர் நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்