/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறித்த நேரத்தில் பணிக்கு வராமல் 'டிமிக்கி' கொடுக்கும் அரசு ஊழியர்கள் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
/
குறித்த நேரத்தில் பணிக்கு வராமல் 'டிமிக்கி' கொடுக்கும் அரசு ஊழியர்கள் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
குறித்த நேரத்தில் பணிக்கு வராமல் 'டிமிக்கி' கொடுக்கும் அரசு ஊழியர்கள் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
குறித்த நேரத்தில் பணிக்கு வராமல் 'டிமிக்கி' கொடுக்கும் அரசு ஊழியர்கள் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
ADDED : ஏப் 09, 2025 10:44 PM
திருவாலங்காடு:அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய முக்கிய இயந்திரமாக இருப்பது அரசு அலுவலகங்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான சான்றுகள், ஆவணங்கள், உதவிகளை பெறுவதற்கு அரசு அலுவலகங்களையே நம்பியுள்ளனர்.
அரசின் வாயிலாக மக்களுக்கு சேவை செய்வோர் அரசு ஊழியர்கள். இவர்கள் பலரும் தங்கள் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்கின்றனர். ஒரு சிலர் அரசு பணியில் அலட்சியமாக நடந்து கொள்வது பலரையும் பாதிப்படைய செய்கிறது.
வரையறுக்கப்பட்ட விதி
அரசு ஊழியர்கள் காலை 10:00 மணிக்கு பணிக்கு வரவேண்டும். 10:10 மணிக்குள் அலுவலக வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். மாலை 5:45 மணிக்கு பணி முடித்து செல்ல வேண்டும். உணவு இடைவேளைக்கு அரை மணி நேரம் எடுத்து கொள்ளலாம்.
இது தான் அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட விதி. ஆனால், சில அலுவலகங்களில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகத்தில், 10:00 மணிக்கு வரவேண்டிய ஊழியர்கள், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் தாமதமாக பணிக்கு வருகின்றனர்.
கையெழுத்திட்ட ஒரு சில மணி நேரத்தில் 'டீ பிரேக்' என, அவராகவே ஒரு நேரத்தை ஒதுக்கி டீக்கடைக்கு சென்று விடுகின்றனர். அதன்பின், தன் இருக்கைக்கு எவ்வளவு நேரம் கழித்து திரும்புவர் என, யாரும் உறுதி கூற முடியாது.
அதேபோல், மதிய உணவு இடைவேளையை ஒரு மணி நேரத்திற்கு மேலாக எடுத்து கொள்கின்றனர். சிலர் மாலை நேரம் பணிக்கு வருகின்றனர்.
கேள்வி கேட்பது இல்லை
இதுபோன்ற அவலம் மாவட்டம் முழுதும் உள்ள அரசு அலுவலகங்களில் நிகழ்கிறது. இவர்களை கண்காணிக்க வேண்டிய அலுவலக மேலாளர்கள், கண்காணிப்பாளர்கள், சக ஊழியர்களை அனுசரித்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் தாமதமாக வருவோரை கேள்வி கேட்பது இல்லை.
பொது மக்கள் கேட்டால் முறையான பதில் கிடைப்பதில்லை. இதனால், அதிகாரிகளுக்காக அலுவலக வாசலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது.
இதை சில புரோக்கர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு, 'வருவாய் துறை அலுவலகங்களில் அதிகாரிகளின் கையெழுத்து, ஆவணங்களை சரிபார்த்தல், விண்ணப்பம் பூர்த்தி செய்தல் போன்ற பணிகளை முடித்து கொடுக்கிறோம்' என பேரம் பேசுகின்றனர்.
இதில் சில அதிகாரிகளும், புரோக்கர்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர். இதை உயரதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்-லைனில் பதிவு
இதுகுறித்து திருவாலங்காடைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜி.ராமலிங்கம் கூறியதாவது:
அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வருவதை, துறை உயரதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மேலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியர்களின் வருகைப்பதிவை நவீனப்படுத்தும் வகையில், ஆன்-லைனில் கைரேகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

