/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆண்டார்மடத்தில் தரைப்பாலத்திற்கு 'முட்டு' ஆர்ப்பரிக்கும் வெள்ள நீருக்கு தாங்குமா?
/
ஆண்டார்மடத்தில் தரைப்பாலத்திற்கு 'முட்டு' ஆர்ப்பரிக்கும் வெள்ள நீருக்கு தாங்குமா?
ஆண்டார்மடத்தில் தரைப்பாலத்திற்கு 'முட்டு' ஆர்ப்பரிக்கும் வெள்ள நீருக்கு தாங்குமா?
ஆண்டார்மடத்தில் தரைப்பாலத்திற்கு 'முட்டு' ஆர்ப்பரிக்கும் வெள்ள நீருக்கு தாங்குமா?
ADDED : டிச 03, 2024 06:23 AM

பொன்னேரி: பொன்னேரி அடுத்து காட்டூர் கிராமத்தில் இருந்து அபிராமபுரம், கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, ஆண்டார்மடம் கிராமங்கள் வழியாக பழவேற்காடு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையில் ஆண்டார்மடம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் வாகன போக்குவரத்திற்காக, சிமென்ட் உருளைகள் பதிக்கப்பட்ட தரைப்பாலம் உள்ளது.
மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த கிராமவாசிகள் பழவேற்காடு அரசு மருத்துவமனை செல்வதற்கும், அத்தியாவசிய தேவைகளுக்கு பொன்னேரி சென்று வரவும் இந்த தரைப்பாலம் வழியாக பயணிக்கின்றனர்.
மீஞ்சூர், தத்தமஞ்சி, காட்டூர் ஆகிய பகுதிகளில் மீன் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் இந்த தரைப்பாலம் வழியாக பழவேற்காடு மீன் மார்க்கெட் சென்று வந்தனர். ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மேற்கண்ட தரைப்பாலம் சேதம் அடைவதும், ஆற்று நீரில் சாலை அரித்து செல்லப்படுவதும் தொடர்கிறது.
ஆற்றில் நீர்வரத்து குறைந்தவுடன் மீண்டும் மணல் மூட்டைகளை போட்டு தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும், 2 - 3 மாதங்களுக்கு இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கிறது.
அச்சமயங்களில் மேற்கண்ட கிராமவாசிகள் மற்றும் மீன் வியாபாரிகள், 8 - 10 கி.மீ., தொலைவு சுற்றிக் கொண்டு வஞ்சிவாக்கம் வழியாக பழவேற்காடு மற்றும் பொன்னேரி பகுதிக்கு சென்று வரும் நிலை ஏற்படுகிறது.
தற்போது ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில், ஆண்டார்மடம் பகுதியில் தரைப்பாலம் பலவீனம் அடைந்து வருகிறது.
அதையடுத்து அப்பகுதியில், மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம், சவுக்கு கட்டைகளை கட்டி, மணல் மூட்டைகளை போட்டு 'முட்டு' கொடுத்து வருகின்றன.
பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து, வினாடிக்கு, 7,300 அன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதுமேலும் அதிகரிக்கும் நிலையில், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், ஆண்டார்மடம் தரைப்பாலத்திற்கு அதிகாரிகள் கொடுத்துவரும் 'முட்டு' ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தை தாங்குமா என, கிராமத்தினர் அதிருப்தியுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைப்பது ஒன்றே தீர்வாக இருக்கும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.