/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் அதிகரிக்கும் காதல் திருமணங்கள் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
/
திருத்தணி முருகன் கோவிலில் அதிகரிக்கும் காதல் திருமணங்கள் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
திருத்தணி முருகன் கோவிலில் அதிகரிக்கும் காதல் திருமணங்கள் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
திருத்தணி முருகன் கோவிலில் அதிகரிக்கும் காதல் திருமணங்கள் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ADDED : மே 04, 2025 02:09 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சிலர் வேண்டுதல் காரணமாக முருகன் மலைக்கோவிலில் திருமணம் செய்கின்றனர்.
இதற்காக கோவில் நிர்வாகம், ஆர்.சி.மண்டபம், மயில், காவடி, உச்சி பிள்ளையார் மண்டபங்களில் பக்தர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு, குறைந்த வாடகையில் கட்டணம் நிர்ணயித்து, திருமணம் நடத்தி வைக்கிறது.
மேலும், திருமணமான தம்பதியருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் திருமண சான்றும் வழங்கப்படுகிறது. இந்த திருமணங்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக, காதல் ஜோடிகள் பெற்றோருக்கு தெரியாமல், மலைக்கோவில் தேர்வீதியில் உள்ள வேல் முன் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர்.
இந்த திருமணம் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் நடந்து வருகிறது. சில ஜோடிகள் திருமணம் செய்யும் போது, பெற்றோர் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால், சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பதறி அடித்து அங்கிருந்து ஓடுகின்றனர்.
உதாரணமாக, திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டையில் உள்ள ஒரு கல்லுாரியில் படித்த மாணவ - மாணவி இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள், இரு நாட்களுக்கு முருகன் மலைக்கோவிலில் தனது நண்பர்கள் உதவியுடன், வேல் மண்டபம் முன் மணக்கோலத்தில் இருந்தனர்.
இதை பார்த்த பெண் வீட்டாரின் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது நண்பர்கள், உறவினர்களை சமரசம் செய்து கொண்டிருக்கும் போதே, தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டனர். பின், பெண்ணின் உறவினர்கள் அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், இருவரும் 18 வயதை கடந்தது தெரியவந்தது. பின், இருவரையும் அனுப்பி வைத்தனர்.
அதேபோல், நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு ஒரு காதல் ஜோடி, நான்கு நண்பர்களுடன் வந்து, வேல் முன் திருமணம் செய்து கொண்டு அங்கிருந்து சென்றனர். அந்த பெண்ணுக்கு, 18 வயதுக்கும் குறைவாக இருக்கலாம் என, திருமணத்தை பார்த்த பக்தர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற குழந்தை திருமணங்களும், முருகன் கோவிலில் அடிக்கடி நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார், மலைக்கோவிலில் அனுமதியின்றி நடக்கும் திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என, பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.